சட்டக் கல்லூரிகளின் கவுரவ விரிவுரையாளர்களுக்கு 6 மாத ஊதியம் பாக்கி
சென்னை: சென்னை அரசு அம்பேத்கர் சட்ட கல்லூரி உட்பட, தமிழகத்தின் ஏழு அரசு சட்ட கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு, ஆறு மாத ஊதியம் இன்னும் வழங்கப்படாததால், கடும் அவதிப்படுகின்றனர். தமிழகத்தில் உள்ள ஏழு அரசு சட்ட கல்லூரிகளில் 150க்கும் அதிகமான கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அனைவரும், முதுகலை, முனைவர் பட்டங்களை பெற்று, அரசு பணிக்காக காத்திருக்கின்றனர். அவர்களுக்கு தனியார் கல்லூரிகளில், அதிகமான சம்பளம் கிடைக்க வாய்ப்பிருந்த போதும், அரசு கல்லூரிகளில் பணிபுரிந்தால், முன் அனுபவ சான்று, வேலையில் முன்னுரிமை ஆகியவை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால், ஒரு மணி நேரத்திற்கு வகுப்பு எடுக்க 500 ரூபாய் என்ற அடிப்படை ஊதியத்தில், மாதத்திற்கு 30 மணி நேரம் பணிபுரிந்து, 15 ஆயிரம் ரூபாய் ஊதியம் பெறுகின்றனர். ஆனால், நிரந்தர விரிவுரையாளர்களை, 40 மணி நேரங்களுக்கு மேல் போதிக்க வைப்பதும், அலுவலக பணிகளை மேற்கொள்ள செய்வதாக புகார் கூறப்படுகிறது. இந்த நிலையில், கவுரவ விரிவுரையாளர்களுக்கு, கடந்த ஏப்ரலில் இருந்து சம்பளம் வழங்கப்படவில்லை. அதனால் அவர்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கவுரவ விரிவுரையாளர்கள் கூறுகையில், "ஒவ்வொரு ஆண்டும், அரசாணை பிறப்பிக்கப்பட்டு, கவுரவ விரிவுரையாளர்கள் பணியமர்த்தப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டுக்கான அரசாணை இதுவரை வழங்கப்படவில்லை. தற்போது, அரசு ஊழியர்களுக்கு, போனஸ் சலுகைகள் கிடைக்கின்றன. ஆனால், எங்களுக்கு ஆறு மாத சம்பளமே வரவில்லை. விரைவில் எங்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும்" என்றனர்.