ஒரே பல்கலையாகிறது அண்ணா பல்கலை
சென்னை அண்ணா தொழில்நுட்பப் பல்கலை, நெல்லை அண்ணா தொழில்நுட்பப் பல்கலை, கோவை அண்ணா தொழில்நுட்பப் பல்கலை, மதுரை அண்ணா தொழில்நுட்பப் பல்கலை, திருச்சி அண்ணா தொழில்நுட்பப் பல்கலை என பிரிக்கப்பட்ட அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஒன்றிணைக்கப்பட்டு சென்னையில் மட்டும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆளுநர் பர்னாலா தனது அறிவிப்பில் கூறியிருப்பதாவது: அதிக எண்ணிக்கையில் உயர் கல்விக்கானப் பல்கலைக் கழகங்களைத் தொடங்கி விட்டால் மட்டும் கல்வியின் தரம் உயர்ந்து விடாது என இந்த அரசு கருதுகிறது. அண்ணா பல்லைக்கழகங்களை மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் தொடங்கியதால் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வலுவிழந்து விட்டது. இதனால் கல்விச் சேவையின் தரம் உயராமல் சுயமாக செயல்பட இயலாத பல நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு வர இந்த அரசு முடிவெடுத்துள்ளது. இந்த அரசு பல்கலைக்கழகங்களைச் சீரமைத்து உலகத் தரம் மிக்க நிறுவனங்களாக மாற்றியமைக்க சிறப்புத் திட்டம் ஒன்றைச் செயல்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.