ஜெயித்துக் காட்டுவோம் கல்வித் திருவிழா
சங்கராபுரம் : தினமலர் நாளிதழ் சார்பில் நேற்று சங்கராபுரத்தில் நடந்த ஜெயித்துக் காட்டுவோம் கல்வித் திருவிழாவில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். டி.வி.ஆர்., அகாடமி வழங்கும் தினமலர் நாளிதழ் சார்பில் ஜெயித்து காட்டுவோம் கல்வித் திருவிழா சங்கராபுரம் ரோட்டரி திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான இந்த கல்வி நிகழ்ச்சி காலை 8.30 மணிக்கு துவங்கியது. இதில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரி இறையன்பு எழுதிய ஜெயித்துக்காட்டுவோம் புத்தகம், மாணவிகளுக்கான ஹெல்த் ஸ்பெஷல் புத்தகம், கையேடு, உடம்பும் மனசும் நல்லா இருக்கனும் உள்ளிட்ட புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சி துவங்கியதும் மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முதன் முறையாக சமச்சீர் பாடத்திட்டம் மூலம் பொதுத்தேர்வுக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்துதல், தேர்வை பயமின்றி எதிர்கொள்வது, திட்டமிட்டு படித்தல், நல்ல மதிப்பெண்களை பெறுவது போன்றவை குறித்து டிப்ஸ் வழங்கப்பட்டது. அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் அனைத்து பாடங்களிலும் முக்கிய பகுதிகள் மற்றும் முக்கிய வினாக்கள் குறித்து விளக்கமளித்தனர். .மேலும் நிகழ்ச்சிக்கு அதிகாலையிலேயே ஆர்வத்துடன் வந்திருந்த புதுப் பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அருள்மணி, அழகுமணி மற்றும் நிகழ்ச்சியின் போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியாக பதிலளித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.