பல்கலை மாணவர்களுக்கு அவசியமான லேப்டாப்
வெளிநாட்டிலோ, உள்நாட்டிலோ உயர்கல்வி பயிலவிருக்கும் மாணவர்கள் நவீன பயன்பாடுகள் கொண்ட லேப்-டாப் வாங்குவது அவசியமானதாகும். தற்போது பல்வேறு துறைகளும் கணினி மூலமாக ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கணினியின் பயன்பாடு கல்வித் துறையில் அதிகமாக உள்ளது. சேர்க்கைக்கு விண்ணப்பிப்பது முதல் தேர்வு வரை கணினியிலேயே நடத்தப்படுகிறது. பல்கலையில் சேரும் மாணவர்கள், ஒவ்வொரு முறையும் தங்களது தேவைக்காக கணினி மையங்களையோ, பல்கலையின் கணினி அறைகளையோ தேடி ஓடிக் கொண்டிருக்க முடியாது. அதேப்போல, தற்போது பல பாடத்திட்டங்கள் கணினியில் ஏற்றப்பட்டுவிட்டது. எங்கியிருந்தும், எந்தவிதமான பாடங்களையும் படிக்க மடிக்கணினி மிகுந்த பயனுள்ளதாக அமையும். அதேப்போல, பிராஜெக்ட் செய்யும் மாணவர்களுக்கும், பிராக்டிக்கல் செய்யவிருக்கும் மாணவர்களுக்கும் பல்வேறு தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள லேப்டாப் பேருதவியாக இருக்கும். பல்கலை அளவில் பட்டப்படிப்பு படிக்கச் செல்லும் மாணவர்கள் இணையதளம் வாயிலாக பல்வேறு தகவல்களை பெற இயலும். பல்கலை தொடர்பான தகவல்கள் மட்டுமல்லாமல், பாடப்பிரிவுகள் குறித்தும் ஏணைய தகவல்களை இணையதளம் வாயிலாக பெறலாம். ஒவ்வொரு முறையும் ஒரு கணினி மையத்திற்குச் சென்று இணையதளத்தை பயன்படுத்திக் கொண்டிருக்க முடியாது. பிராஜெக்ட் வேலைகளை எடுத்துச் செய்யும் மாணவர்கள் அதனை சி.டி. வடிவில் சமர்ப்பிக்க வேண்டி வரலாம். அதற்கும் லேப்டாப் உபயோகமாக இருக்கும். சில கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் லேப்டாப் வைத்திருப்பது வலியுறுத்தப்படுகிறது. தற்போது தமிழக அரசே பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி, தொழில்நுட்ப மாணவர்கள் வரை அனைவருக்கும் இலவச லேப்-டாப் வழங்கி வருகிறது. இந்த நிலையில், பல்கலை அளவில் உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்கள் நிச்சயம் லேப்-டாப் வைத்திருப்பது பயனுள்ளதாக அமையும்.