கல்லூரி மாணவர்களுக்கு லோன் மேளா
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் 13 யூனியன்களில் கல்லூரி மாணவர்களுக்கு கடன் லோன் மேளா வழங்குவதற்கான முகாம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. வறுமை கோட்டுக்கு கீழ் வசிக்கும் மாணவர்கள், உயர்கல்வி படிப்பதில் பின்னடைவு ஏற்படக்கூடாது என்பதற்காக பிளஸ் 2 படிப்பு முடித்த குடும்பத்தின் முதல் பட்டதாரி மாணவனுக்கு கல்வி உதவித்தொகையாக ஆண்டுக்கு 20 ஆயிரம் ரூபாய் மத்திய அரிசு சார்பில் வழங்கப்படுகிறது. உயர்கல்வி நிறுவனத்தில் படிக்கும்போது, அவர்களின் கல்வி கட்டணத்தில் இருந்து அரசின் உதவித்தொகை குறைத்து கொள்ளப்படும். இத்திட்டத்தால், ஏராளமான ஏழை, எளிய முதல் பட்டதாரி மாணவர்கள் பயனடைகின்றனர். அரசு சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டாலும், மாணவர்களின் படிப்பு செலவுக்காக, வங்கிகள் மூலமாக கடன் வசதியும் செய்யப்பட்டு வருகிறது. மாணவர்கள் வசிக்கும் எல்லைக்கு உட்பட்ட வங்கிகள் மூலமாக, லோன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட மாவட்டம் முதன்மை வங்கிகள் மேற்பார்வையில், லோன் மேளா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 யூனியன்களில், பவானி மற்றும் சத்தியமங்கலம் யூனியனை சேர்ந்தவர்களுக்கு ஒரே இடத்தில் லோன் மேளா நடத்தப்படும். வரும் 29ம் தேதி அம்மாபேட்டை, செப்டம்பர் 3ம் தேதி அந்தியூர் 4ம் தேதி பவானி 6ம் தேதி சத்தியமங்கலம், பவானி 10ம் தேதி நம்பியூர் 12ம் தேதி கோபி 13ம் தேதி பெருந்துறை 17ம் தேதி ஈரோடு 18ம் தேதி சென்னிமலை 20ம் தேதி மொடக்குறிச்சி 24ம் தேதி, கொடுமுடி 25ம் தேதி, டி.என்.பாளையம் 27ம் தேதி தாளவாடி ஆகிய யூனியன் அலுவலகங்களில் நடக்கும். சம்பந்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் அல்லது அவரது பெற்றோர்கள் எஸ்.எஸ்.எல்.ஸி. மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்று, கல்லூரியில் சேர்ந்ததற்கான அனுமதி கடிதம், கவுன்சிலிங் சான்று, குடும்ப அட்டை நகல்களுடன் லோன் மேளாவுக்கு செல்ல வேண்டும். காலை 10 முதல் மதியம் 2 மணி வரை நடத்தப்படும் லோன் மேளாவை, கல்லூரி மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என வங்கி அதிகாரி கூறினார்.