உள்ளூர் செய்திகள்

புதுவாழ்வு திட்டத்தில் வேலைவாய்ப்புப் பயிற்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் புதுவாழ்வு திட்டம் மூலம் 1,436 பேருக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் வெங்கடாசலம் கூறியதாவது: மாவட்டத்தில் சாணார்பட்டி, நிலக்கோட்டை, ரெட்டியார்சத்திரம், வடமதுரை, தொப்பம்பட்டி ஆகிய ஐந்து ஒன்றியங்களில் உள்ள 121 ஊராட்சிகளில் புதுவாழ்வு திட்டம் செயல்படுகிறது. இதன் மூலம் 122 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சங்கங்களுக்கு முதல் தவணையாக ரூ.7.12 கோடி, இரண்டாவது தவணையாக ரூ.4.08 கோடி என மொத்தம் ரூ.11.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிதாக 732 மகளிர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 707 குழுக்களுக்கு ரூ.1.41 கோடி வரை ஆதார நிதி வழங்கப்பட்டுள்ளது. 4,793 மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டு, 1650 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. 3,895 மாற்றுத்திறனாளிகளை கொண்ட 453 சிறப்பு சுய உதவி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 432 குழுக்களுக்கு ஆதார நிதியாக தலா ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. 1,436 பேருக்கு ஓட்டுனர் பயிற்சி, கம்ப்யூட்டர், எலக்ட்ரீசியன், அழகுகலை போன்ற வேலைவாய்ப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு உள்ளன என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்