உள்ளூர் செய்திகள்

அரியலூரில் பாசில் அருங்காட்சியகத்திற்கு அடிக்கல்

சென்னை: அரியலூரில் 2 கோடி ரூபாய் மதிப்பில் அமைய உள்ள உயிரிப் படிவ அருங்காட்சியகத்திற்கு முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். காரைக்குடி, கோவை, திருவண்ணாமலை, மாமல்லபுரம், ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலா வரவேற்பு மையம்; ஜவ்வாது மலையில் உள்ள, ஜமுனாமரத்தூரில் கட்டப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகள் ஓய்வு இல்லம், துயில் கூடம், சுற்றுலா தகவல் மற்றும் கருத்து விளக்க மையம், வேலூர், ஓட்டேரியில் மேம்படுத்தப்பட்ட சிறுவர் பூங்கா ஆகியவற்றையும் திறந்து வைத்தார். சென்னை அரசு அருங்காட்சியகத்தில் புனரமைக்கப்பட்ட அமராவதி காட்சிக்கூடம், இந்து சிற்பங்கள் காட்சிக் கூடம், சமண சிற்பங்கள் காட்சிக் கூடம், மானிடவியல் காட்சிக் கூடம், துகிலியல் அச்சுக் கட்டைகள் காட்சிக் கூடம், செப்புப் பட்டயங்கள் காட்சிக் கூடம், முப்பரிமாண காட்சியரங்கம், ஆகியவற்றையும் முதல்வர் திறந்து வைத்தார். அருங்காட்சியக உலா பஸ்சையும் துவக்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்ட அருங்காட்சியகத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி 80 லட்சம் ரூபாயில் மேம்படுத்தப்பட்ட காட்சிக்கூடமும் திறக்கப்பட்டது. கலை பண்பாட்டுத் தறை சார்பில் மதுரை தல்லாகுளம் பகுதியில் கட்டப்பட்டுள்ள கலை பண்பாட்டு வளாகம்; கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில், பூங்காவுடன் கட்டப்பட்டுள்ள, அருங்காட்சிய கலைக்கூட கட்டடம்; பூம்புகாரில், ஆழ்கடல் அகழ் வைப்பக அருங்காட்சியக கட்டடம், ஆகியவையும் திறக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்