உள்ளூர் செய்திகள்

உயர்கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை: எல்.ஐ.சி., சார்பில், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு உயர்கல்விக்கான உதவித்தொகை பெற, செப்.,23ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வறுமை கோட்டுக்கு கீழுள்ள, மாணவர்களின் உயர்கல்வி கனவுக்கு கைகொடுக்கும் வகையில், எல்.ஐ.சி., நிறுவனம் &'எல்.ஐ.சி., கோல்டன் ஜூப்லி ஸ்காலர்ஷிப் என்ற கல்வி உதவித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இளங்கலை பட்டப்படிப்புகள், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகள், பட்டயப் படிப்புகள், மற்றும் ஐடிஐ படிப்புகளில் சேர இக்கல்வி உதவித் தொகை வழங்கப்படும். இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், 10 மற்றும் பிளஸ்2 தேர்வில், குறைந்தபட்சம், 60 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பெற்றோர் ஆண்டு வருமானம், ஒரு லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருப்பது அவசியம். தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு ஆண்டொன்றுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். விண்ணப்பங்களை, http://www.licindia.in/ GJF_scholarship.htm என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும்தான் இந்த உதவித்தொகை கிடைக்கும். கோவை மண்டல எல்.ஐ.சி., மகளிர் குழு அமைப்பாளர் உமாமகேஸ்வரி கூறுகையில், அனைத்து விபரங்களும், மேற்குறிப்பிட்ட இணையதளங்களில் உள்ளது. விண்ணப்பிப்பதில் சிக்கல் உள்ள மாணவர்கள் அந்தந்த மண்டல தலைமை அலுவலகத்தின், தொழில்துறை நிர்வாக பிரிவு அதிகாரிகளை நேடியாக அணுகி விபரங்களை தெரிந்து கொள்ளலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்