மாணவர்களுக்கு கை கழுவும் பயிற்சி
திருப்பூர்: பள்ளிகளில் நாளை, மாணவ மாணவியருக்கு, கை கழுவும் பயிற்சி அளிக்கப்படுகிறது.ஆண்டுதோறும் அக்., 15ல், உலக கை கழுவும் தினம் கடைபிடிக்கப்படுகிறது. சுகாதாரம் மற்றும் கைகளின் சுத்தத்தை வலியுறுத்தும் வகையில், இந்நாளில், கைகளை தூய்மையாக பராமரிப்பது குறித்து அறிவுறுத்தப்படுகிறது. இதையொட்டி, அரசு பள்ளிகளில், நாளை மாணவ மாணவியருக்கு கை கழுவும் பயிற்சி அளிக்கப்படுகிறது. அனைவருக்கும் கல்வி இயக்ககம் மற்றும் யுனிசெப் நிறுவனம், இப்பயிற்சியை தருகிறது. தூய்மையான பாரதம், தூய்மையான பள்ளி&' என்ற அடிப்படையில் பள்ளிகளில் சுகாதாரம், சுத்தமான குடிநீர் குறித்தும், மாணவ மாணவியர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆரம்ப வகுப்பில் படிக்கும், மாணவ, மாணவியர் கைகளை தூய்மையாக பராமரிக்காமல், சரியாக கழுவாமல் உணவு பண்டங்களை உண்பதால், கிருமிகள் தாக்கி, பல்வேறு பாதிப்புக்கு ஆளாகின்றனர். கைகளை தூய்மையாக வைத்து கொள்வதால், நோய் பாதிப்பில் இருந்து காத்து கொள்ளலாம் என்பதை மாணவர்களுக்கு அறிவுறுத்துமாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.