உள்ளூர் செய்திகள்

மாணவர்களிடையே அறிவியல் கண்காட்சி போட்டி

விழுப்புரம்: இளைஞர் எழுச்சி நாளை முன்னிட்டு, மாவட்ட அளவில் அரசு பள்ளி மாணவர்களுக்கிடையே அறிவியல் கண்காட்சி நடந்தது. மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் பிறந்த இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட வேண்டுமென தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையொட்டி, தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கிடையே கட்டுரை, பேச்சு மற்றும் அறிவியல் கண்காட்சி நடந்தது. இதன்படி, விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் மாவட்ட அளவில் கட்டுரை, பேச்சு போட்டிகளும், நகராட்சி ஆண்கள் மேல்நிலை பள்ளியில் அறிவியல் கண்காட்சியும் நடந்தது. அப்துல் கலாம் சாதனைகள் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆகிய தலைப்புகளில் நடந்த கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகளில் 500 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அதே போல், நகராட்சி ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில், மின்சிக்கன தெருவிளக்கு, ரயிலின் திசை வேகம் மூலம் மின் உற்பத்தி, மங்கல்யாண் விண்கலம், அமிலமழை, நிலக்கரி சேகரிக்கும் முறை, எளிய குளிரூட்டி, மழைநீர் சேகரிப்பு உட்பட 300க்கும் மேற்பட்ட மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த போட்டிகளில் பங்கேற்றுள்ள மாணவர்களின் செயல்பாடுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், மாவட்ட கல்வி அலுவலர்கள் மாதவன், தனமணி, ஞானஜோதி ஆகியோர் ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்