கல்லூரியில் சேர்வோருக்கு உதவித்தொகை அறிவிப்பு
சென்னை: பெற்றோரை இழந்த, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், கல்லுாரி படிப்பில் சேர, 30 ஆயிரம் ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்படும் என, தனியார் தொண்டு நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து, டீம் எவரெஸ்ட் என்ற தனியார் தொண்டு நிறுவனம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கடந்த ஒன்பது ஆண்டுகளில், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், கல்லுாரிப் படிப்பில் சேர, &'டீம் எவரெஸ்ட்&' உதவியுள்ளது. இந்த ஆண்டில், சென்னையில் உள்ள பெற்றோர் அல்லாத அல்லது தாய், தந்தை இருவரில் ஒருவரை இழந்த அல்லது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியருக்கு கல்லுாரியில் இளநிலை படிப்பில் சேர, புதிய கல்வி உதவித்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஐ அம் த சேஞ்ச் ஸ்காலர்ஷிப் என்ற இந்த திட்டத்தில், ஆண்டுதோறும், 30 ஆயிரம் ரூபாய் வரை, கல்வி உதவித்தொகை கிடைக்கும். பிளஸ் 2 தேர்வில், 70 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற, அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே, இது வழங்கப்படும். தனியார் பள்ளி மாணவர்களுக்கு கிடையாது. உதவித்தொகை பெற தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவியர், டீம் எவரெஸ்ட் நடத்தும் வார இறுதி வகுப்புகளில், ஆண்டு ஒன்றுக்கு, 100 மணி நேரமாவது பங்கேற்க வேண்டும். உள்ளிருப்பு பயிற்சியிலும் கட்டாயம் பங்கேற்க வேண்டும். மெரிட் முறையில் கல்லுாரியில் இடம் பெற்றவர்கள் மட்டுமே, உதவித்தொகை பெற தகுதியானவர்கள். கலை, அறிவியல், தொழிற்படிப்பு என மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப எந்த துறைக்கும் உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம். டிப்ளமோ படிப்புக்கு பொருந்தாது. தகுதி வாய்ந்த மாணவ, மாணவியர், 89396 12365 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.