உள்ளூர் செய்திகள்

‘அடுக்குமாடி கட்டடத்தில் விவசாயம் எளிமையானது’

கோவை: ‘அடுக்குமாடி கட்டட விவசாய முறையை, விவசாயிகள் எளிமையாக பின்பற்றலாம். அதற்கேற்ற தொழில்நுட்பம் உள்ளது’ என்கிறார், கொலம்பியா பல்கலை சுற்றுச்சூழல் துறை பேராசிரியர் டிக்சன்டெஸ்ப்மியர். கோவை, கொடிசியா வளாகத்தில் ‘அக்ரி இன்டெக்ஸ்-2009 ’கண்காட்சி நடந்து வருகிறது. இதில், ‘இந்திய விவசாயம் அடுத்த தலைமுறையில் எப்படியிருக்கும்’ என்ற தலைப்பில், சர்வதேச கருத்தரங்கு நடந்தது. இதற்கு தலைமை வகித்த கொலம்பியா பல்கலை சுற்றுச்சூழல் துறை பேராசிரியர் டிக்சன்டெஸ்ப்மியர் பேசியதாவது: தொழில்நுட்ப வளர்ச்சி உலகம் முழுக்க பரவி வருகிறது; விவசாயத்தையும் விட்டு வைக்கவில்லை. அறுவடை, விதைப்பு, பூச்சிக்கொல்லி, பாசனமுறை என்று ஒவ்வொரு துறையிலும் நாம் எதிர்பார்க்காத அளவில் தொழில் நுட்ப வளர்ச்சி மேம்பட்டு வருகிறது. விவசாயத்தில் பெரும்பகுதி வருவாய், போக்குவரத்து செலவிற்கே போய்விடுகிறது. மீதமிருப்பதில்தான், லாப நஷ்டத்தை பார்க்க வேண்டியுள்ளது. அதிக பனி மற்றும் மழை பொழிவு, எதிர்பாராத காற்று, வெள்ளம் ஏற்பட்டால் அதனால் பயிருக்கு நஷ்டம் ஏற்படும். இதன் காரணமாகவே, நிலத்தை நாம் சொந்தமாக்கிக் கொள்ளாமலே விவசாயம் செய்யும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர் அமெரிக்கர்கள். இத்தொழில் நுட்பத்தை அரபு நாடுகளும் பின்பற்றி விவசாயம் செய்து வருகின்றனர். நிலமில்லாமல் விவசாயம் செய்வது எப்படி என்று யோசிக்க வேண்டாம். அடுக்குமாடி கட்டடங்கள் கட்டப்பட்டு, காலியாக உள்ள மேற்பரப்பில், தடையில்லாமல் கிடைக்கும் சூரிய ஒளியை பயன்படுத்தி விவசாயம் செய்யலாம். இதன்மூலம் சுற்றுச்சூழல் மாசு களையப்பட்டு வளம் ஏற்படும். நகரிலுள்ள கட்டடத்தின் மேற்பரப்பில், இத்தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதால். போக்குவரத்து செலவும் ஏற்படாது. இத்தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பெங்களூரில், லெப். கர்னல் பிரகாஷ் விவசாயம் செய்து வருகிறார். இவ்வாறு டிக்சன்டெஸ்ப்மியர் கூறினார். பாசனமுறை குறித்து, அமெரிக்காவிலுள்ள லின்டசி கார்பரேஷன் நிறுவன மேலாளர் டேர்க்லெனி பேசுகையில், விவசாயத்தில் பாசனமுறையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. சொட்டு நீர் பாசனம் தற்போது பயன்பாட்டிலுள்ளது. அதன் ஒரு படி மேலாக சுழற்சி முறை, நீர்ப்பாசனம் அறிமுகப்படுத்தப்பட்டுள் ளது. இதிலுள்ள கருவி நான்கு பக்கங்களிலும் சுழன்று தண்ணீரை பீய்ச்சி அடிக்கும். அப்போது தாவரத்தின் அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் போய் சேரும். இம்முறை இந்தியாவில் பின்பற்றினால் விவசாயம் மேலும் செழிப்படையும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்