தாய்மொழியை பாதுகாக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்
தமிழக கட்டட தொழிலாளர் மத்திய சங்க தலைவர் பொன்குமார் தாக்கல் செய்த பொதுநல மனு:தமிழகத்தில் மத்திய அரசின் 42 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. இங்கு ஆங்கிலம், ஹிந்தி, சமஸ்கிருதத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தமிழ் புறக்கணிக்கப்படுகிறது. ஆறாவது வகுப்பு முதல் 8 வகுப்புகளில், ஒரு வகுப்பில் 20 அல்லது அதற்கு மேற்பட்ட மாணவர்கள் விரும்பினால் மட்டுமே தாய் மொழி பயிற்றுவிக்கப்படும் என கேந்திரிய வித்யாலயா கல்வி விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.தமிழை தாய்மொழியாக கொண்டவர்களின் குழந்தைகள் அதிகம்பேர் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் படிக்கின்றனர். ஒரு வகுப்பில் 20 அல்லதுஅதற்கு மேற்பட்ட மாணவர்கள் விரும்பினால் மட்டுமே தாய் மொழி பயிற்றுவிக்கப்படும் என்ற கேந்திரிய வித்யாலயா கல்வி விதி மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்திற்கு எதிராக உள்ளது.தமிழக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் முதலாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை தமிழ் பாடம் இடம்பெற வேண்டும். அங்கு நிரந்தர பணியில் தமிழாசிரியர்கள் நியமிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு பொன்குமார் மனு செய்தார்.நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு: பிரதமர் தாய் மொழியை ஊக்குவிக்க வேண்டும் என்கிறார். தாய்மொழியில் கல்வி கற்கும் ஜப்பான், இஸ்ரேல் உட்பட சில நாடுகள் வளர்ச்சியடைந்து உள்ளன. கேந்திரிய வித்யாலயாவிதியானது ஹிந்தி பேசாத பிற மாநிலங்களின் உரிமையை பாதிக்கும் வகையில் உள்ளது என அதிருப்தி தெரிவித்தனர். நீதிபதிகள்: மத்திய அரசு தரப்பில் விபரம் பெற்று அதன் வழக்கறிஞர் தெரிவிக்க வேண்டும். உத்தரவு இன்று (நவ.,27) பிறப்பிக்கப்படும் என்றனர்.