பள்ளி, கல்லூரி மாணவர்கள் கணக்கெடுப்பு
சென்னையில் அலுவலகம் செல்லும் ஊழியர்கள், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் உட்பட அனைத்துத் தரப்பினரையும் பாதிக்கும் ஒரே விஷயமாக போக்குவரத்து நெரிசல் உள்ளது. சென்னையில் 32 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன. இதில், பெரும்பாலானவை இருசக்கர வாகனங்கள். மேலும் தினசரி 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்படுகின்றன. இதனால், சென்னையில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் குறைந்த எண்ணிக்கையில் உள்ள போக்குவரத்து போலீசார், இந் நெரிசலை சமாளிக்க முடியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர். நகரில் பல இடங்களில் புதிதாக மேம்பாலங்கள் அமைக்கப்பட்ட போதும், நெரிசலை ஓரளவிற்கு மேல் சமாளிக்க முடியவில்லை. சென்னை நகரில் பல இடங்களில் அடிக்கடி போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட வேண்டிய நிலை உள்ளது.இந்த போக்குவரத்து நெரிசல்களில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தான். பள்ளி, கல்லூரிக்கு குறித்த நேரத்தில் போக முடியாமலும், வீடு திரும்பும் போதும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். இப்பிரச்னையில் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு போக்குவரத்து போலீசார் தள்ளப்பட்டுள்ளனர்.இதையடுத்து, சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளின் எண்ணிக்கை, செயல்படும் நேரம் ஒவ்வொரு பள்ளி, கல்லூரியிலும் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை போக்குவரத்து போலீசார் சர்வே எடுத்து வருகின்றனர். ஒவ்வொரு பள்ளி, கல்லூரியிலும் எவ்வளவு பஸ், வேன்கள் உள்ளன. அவற்றில் தினசரி எவ்வளவு மாணவர்கள் பயணிக்கின்றனர் என்ற விவரத்தையும் சேகரிக்கின்றனர்.மேலும் பள்ளி, கல்லூரிக்கு அருகில் எத்தனை மாணவர்கள் உள்ளனர்; நீண்ட தூரத்திலிருந்து எத்தனை பேர் வருகின்றனர்; எத்தனை மாணவர்கள் சொந்த வாகனங்களில் வருகின்றனர்; எவ்வளவு பேர் அரசு பஸ், ரயில் வசதிகளை பயன்படுத்துகின்றனர் போன்ற விவரங்களையும் போக்குவரத்து போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். இதன் அடிப்படையில் எதிர்கால போக்குவரத்து திட்டங்களை உருவாக்க, போக்குவரத்து போலீசார் திட்டமிட்டுள்ளனர்.மாணவர்களுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் பள்ளி, கல்லூரி நேரங்களை மாற்றுவது; அந்த நேரத்தில் மற்ற வாகனங்களின் போக்குவரத்தை கட்டுப்படுத்துவது குறித்தும் போலீசார் ஆலோசித்து வருகின்றனர். எனவே, அரசுடன் ஆலோசித்து விரைவில் இந்த விஷயத்தில் அதிரடி மாற்றங்கள் உருவாக்கப்படும்.இதுமட்டுமின்றி, சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் முயற்சியிலும் மாநகராட்சியுடன் இணைந்து போலீசார் தீவிரமாக ஈடுபடவுள்ளனர்.சாலைகளில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மர்கள், மரங்கள், போலீஸ் உதவி மையங்கள், சிறு கோவில்கள் ஆகியவை விரைவில் அகற்றப்படும் என, போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.