புலிகள் தினத்தையொட்டி விழிப்புணர்வு போட்டி
வால்பாறை: ஆனைமலை புலிகள் காப்பகத்தில், வரும், 29ம் தேதி சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து, மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வனத்துறை சார்பில் ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.பழங்குடியின மாணவர்கள் அதிக அளவில் படிக்கும் எஸ்.எஸ்.ஏ., உண்டு உறைவிடப்பள்ளியில் நடந்த ஓவியப்போட்டியை, மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன், வால்பாறை வனச்சரக அலுவலர் வெங்கடேஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்த போட்டியில், 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, உலக புலிகள் தினத்தன்று பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் வனத்துறையினர் பங்கேற்றனர்.