வெளிநாட்டில் படிக்கும் மாணவருக்கு கடனுதவி
சுந்தர் பிச்சை, இந்திரா நுாயி, சத்யா நாதெள்ளா, லக்ஷ்மன் நரசிம்மன் என, இந்தியர்கள் இன்று உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க நிறுவனங்களை தலைமையேற்று வழி நடத்துகின்றனர். அதிகளவில், சிறந்த உலகளாவிய பள்ளிகளில் படிக்கவும், உலகளாவிய வாழ்க்கையை தொடரவும் இளம் இந்தியர்கள் புவியியல் எல்லைகளை தாண்டி செல்கின்றனர்.ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் உயர்கல்வி பெற அமெரிக்கா செல்கின்றனர். அமெரிக்காவில் உள்ளூர் மாணவர்களிடம் வசூலிக்கப்படும் வட்டி விகிதத்துக்கு இணையாக, வெளிநாட்டிலிருந்து வரும் மாணவர்களால், கல்விக் கடன் அல்லது தனிநபர் கடன்களை வங்கிகளில் பெற முடியாது.இந்த மாணவர்கள் வேறு நாட்டுக்கு செல்லும் எவரும் அதிக வட்டி விகிதத்துக்கு கட்டுப்பட வேண்டியதன் காரணம், எந்த உள்ளூர் கிரெடிட் பீரோவிலும் அவர்களுக்கு கிரெடிட் ஸ்கோர் இல்லாததால் தான். எனவே, அந்நாட்டு வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் வெளிநாட்டினருக்கு கடன் முதலியன தரும்போது அதிக ஆபத்து உள்ளது. அதனால், அதிக வட்டி மற்றும் கட்டணம் வசூலிக்கின்றனர்.வட்டி குறைப்புபெங்களூரு மற்றும் சான்பிரான்சிஸ்கோவை தளமாக கொண்ட, ஸ்டார்ட்அப் நிறுவனமான லீப் பைனான்ஸ், இந்த சவாலை சமாளிக்க, அமெரிக்காவில் உள்ள இந்திய மாணவர்களுக்கு சேவை செய்ய துவங்கியுள்ளது. அமெரிக்காவில் உள்ள இந்திய மாணவர்கள், 8 முதல் 10 சதவீதம் வரையிலான வட்டி விகிதத்தில் நிதியுதவி பெற உதவிகள் செய்கிறது. ஒரு மாணவரின் எதிர்கால வருவாயை மதிப்பிட, பல்வேறு தரவுகளின் அடிப்படையில் கடன்களை இந்த ஸ்டார்ட்அப் கொடுக்கிறது.இன்கிரட் மற்றும் கேபிடல் ப்ளோட் ஆகிய கம்பெனிகளில் முன்னர் பணிபுரிந்த குமார் மற்றும் வைபவ் சிங் ஆகியோர் வெளிநாட்டுச் சந்தைகளில் இதே போன்ற சவால்களை எதிர்கொண்டதால் லீப் பைனான்ஸ் ஆரம்பிக்கும் யோசனைக்கு வந்தனர். அமெரிக்காவில் உள்ள பல சிறந்த பட்டதாரி படிப்புகளில் இந்திய மாணவர்கள் ஒரு வகுப்பில், 25 சதவீதம் பேர் உள்ளனர். இவர்கள், சிறந்த முறையில் தேர்ச்சி பெற்று சிறந்த எதிர்காலத்தை கொண்ட புத்திசாலியான, கடின உழைப்பாளி மாணவர்கள். ஆயினும்கூட, அவர்கள் பெறும் கல்விக் கடன்கள் அவர்களின் அமெரிக்க சகாக்களை விட அதிக வட்டி விகிதத்தில் உள்ளன. இதை குறைப்பது தான் இவர்களின் நோக்கம்.இந்த ஸ்டார்ட்அப் நிறுவனம், கனடா, இங்கிலாந்து மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் உள்ள இந்திய மாணவர்களுக்கும் சேவை வழங்க திட்டமிட்டுள்ளது. இன்று வெளிநாட்டில் படிக்கும் இந்திய மாணவர்கள் ஆண்டுக்கு, ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிகமாக அமெரிக்க டாலர் மதிப்பில் செலவழிக்கின்றனர். இதற்கு எதிராக 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிகமாக அமெரிக்க டாலர் மதிப்பில் ஆண்டுக்கு கடன் தேவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது.