உள்ளூர் செய்திகள்

அமெரிக்க விசா முறையில் மாற்றம்

முறைகேடுகளை தவிர்க்கவும், விசா விண்ணப்பிக்கும் முறையின் துல்லியம் கருதியும், என்.ஐ.வி., விசா விண்ணப்பிக்கும் முறையை மாற்றியமைத்துள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள டி.எஸ்-156, 157, 158 விண்ணப்ப படிவங்களுக்கு மாற்றாக, முற்றிலும் இணையதளம் மூலமாகவே விண்ணப்பிக்கும், டி.எஸ்-160 என்ற முறையை அமெரிக்க தூதரகம் அறிமுகப்படுத்தியுள்ளது.இதுகுறித்து, சென்னை அமெரிக்க துணை தூதரக அதிகாரி ஆண்ட்ரூ சிம்கின் கூறியதாவது: உலகளவில், அமெரிக்கா விசாவுக்கான விண்ணப்பங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், விசா விண்ணப்பிக்கும் முறையில் ஏற்படும் பல்வேறு முறைகேடுகளை தடுக்கவும், விண்ணப்ப முறையின் துல்லியம் கருதி, புதிய தொழில் நுட்பம் மூலம் மேம்படுத்தும் நோக்கிலும், அமெரிக்க வெளியுறவுத்துறை புதிய விண்ணப்ப படிவத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.  ஏற்கனவே, டி.எஸ்-156, 157, 158 படிவங்களுக்கு மாற்றாக இந்த புதிய, டி.எஸ்-160 படிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த படிவம் முற்றிலும் இணையதளத் தொழில்நுட்பத்தில் இயங்கக் கூடியது. மற்ற இணையதள விண்ணப்பங்களை பூர்த்தி செய்வது போலவே இந்த படிவத்தையும் பூர்த்தி செய்யலாம். பூர்த்தி செய்யப் பட்ட விண்ணப்ப படிவத்தை இணையதளத்தின் மூலமாகவே சமர்ப்பிக்கலாம். படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பியதும் தோன்றும் அத்தாட்சி பக்கத்தை மட்டும் விண்ணப்பதாரர்கள் பிரதி எடுத்துக் கொள்ள வேண்டும். விண்ணப்பதாரர்களின் நேர்காணலுக்கு முந்தைய, விண்ணப்ப பரிசீலனை மற்றும் முன் ஆய்வு சார்ந்த காலதாமதங்களை குறைக்க, இந்த முறை உதவும். வரும் 19ம் தேதி முதல், விண்ணப்பதாரர்கள் புதிய படிவத்தை பயன்படுத்த வேண்டும். அதேபோல், முன்னதாக நேர்காணலுக்கு விண்ணப்பிக்க பழைய விண் ணப்பத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். உதாரணமாக, ஜனவரி 25 அன்று நேர்காணலுக்கு விண்ணப்பிக்க, ஜனவரி 18ம் தேதியே பழைய விண்ணப்பம் கொண்டு பூர்த்தி செய்ய வேண் டும். விசா கட்டணம் மற்றும் நேர்காணல் முறையில் மாற்றம் இருக்காது. இந்த புதிய படிவத்தை http://ceac.state.gov/genniv/ என்ற இணையதள முகவரியில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு சிம்கின் கூறினார்.  இந்நிகழ்ச்சியில், சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தின் விசா பிரிவு தலைமை அதிகாரி பிரையன் டால்டன் மற்றும் விசா பிரிவு அதிகாரி ஆமி ஹிர்சிச் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்