உள்ளூர் செய்திகள்

பொது பாடத்திட்டம் அமலாவதில் குழப்பம்

சென்னை: பல்கலைகளின் பாடத்திட்ட குழு மற்றும் சிண்டிகேட் குழுக்களின் ஒப்புதல் கிடைக்காததால், தமிழக அரசின் பொது பாடத்திட்டம் அமலாவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லுாரிகளில், அந்தந்த பகுதி பல்கலைகள் வழங்கும் பாடத்திட்டப்படி, பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன. தன்னாட்சி கல்லுாரிகள், தாங்களே பாடத்திட்டத்தை உருவாக்கி, பல்கலையின் அனுமதி பெறுகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள, 13 அரசு கலை, அறிவியல் படிப்பு சார்ந்த பல்கலைகளின் இணைப்பு பெற்றுள்ள கல்லுாரிகள், தமிழக அரசின் பொது பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என, உயர்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.இது, கல்லுாரிகளின் தன்னாட்சியை பறிப்பதாகவும், பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி.,யின் விதிகளை மீறுவதாகவும் உள்ளது என, குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. கல்லுாரி ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளன. மக்கள் கல்வி கூட்டியக்கத்தின் பேராசிரியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, நேற்று விடுத்த அறிக்கையில், பொது பாடத்திட்டத்தை தி.மு.க., அரசு உடனே வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.இந்நிலையில், பல்கலைகளின் சட்டப்படி, எந்த ஒரு பாடத்திட்டத்துக்கும், பாடத்திட்ட குழுவான, போர்ட் ஆப் ஸ்டடிஸ் மற்றும் சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல் பெற வேண்டும். இந்த விதியின்படி, சென்னை பல்கலை, பாரதியார், பாரதிதாசன், மதுரை காமராஜ், பெரியார் உள்பட பல பல்கலைகளில், பொது பாடத்திட்டத்துக்கு சிண்டிகேட் ஒப்புதல் அளிக்கப்படவில்லை. சில படிப்புகளுக்கு மட்டும், பாடத்திட்ட குழு ஒப்புதல் அளித்தாலும், அவற்றுக்கு சிண்டிகேட் ஒப்புதல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், பல்கலைகளில் பொதுப் பாடத்திட்டத்தை அமல்படுத்துவது, கல்லுாரிகளின் விருப்பத்துக்கு விடப்பட்டுள்ளதாக, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்