கணிதமேதை ராமானுஜன் குறும்படம் வெளியீடு
ராமானுஜன் என்ற மாமேதையை, அவருடைய வாழ்க்கைப் பின்புலத்தை, எந்தவிதமான பொருள் உதவியும் இல்லாமல் வீடு, வீடாகச் சென்று, பி.கே.ஸ்ரீனிவாசன் என்பவர் தேடினார். 1960களில் ராமானுஜனது ஒரிஜினல் நகல்கள் கிடைத்தன. அதை வைத்து ராஜாஜி முன்னிலையில் புத்தகத்தை வெளியிட்டார். முதல் புத்தகத்தை, ராமானுஜன் மனைவி ஜானகியம்மாள் பெற்றார். ராமானுஜன் பற்றிய வாழ்க்கை குறிப்புகள் அடங்கிய டிவிடி வெளியீட்டு விழா, ராஜ் பவனில் நடந்தது. கவர்னர் பர்னாலா தலைமை வகித்தார். இசைஞானி இளையராஜா, முதல் குறும்படத்தை பெற்றுக் கொண்டார். திரையிடப்பட்ட குறும்படத்தை, நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அனைவரும் கண்டு ரசித்தனர். விழாவில் கவர்னர் பர்னாலா பேசியதாவது: பி.கே.ஸ்ரீனிவாசனின் பெரும் முயற்சியால், கணிதமேதை ராமானுஜனின் வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகளை குறும்படம் மூலமாக பார்த்து வியந்தேன். ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள், இவரை பெரும் முன்னோடியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார். குறும்படத் தயாரிப்பாளர் பி.கே.ஸ்ரீவாசனின் மகன், கண்ணன் ஸ்ரீனிவாசன் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். பேராசிரியர்கள் சேஷாத்திரி, ஸ்ரீனிவாச எஸ்.ஆர்.வரதன் உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் கணித ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.