சட்டம் படித்தவர்களுக்கு கைகொடுக்க ஐ.எல்.எஸ்.,!
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., வரிசையில், சமீபத்தில் கல்வித் துறைக்கான ஐ.இ.எஸ்., உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதையடுத்து, சட்டத் துறையில் வல்லுனர்கள் பற்றாக்குறையை உணர்ந்த மத்திய அரசு, இந்திய சட்டப் பணி (ஐ.எல்.எஸ்.,) உருவாக்கத் திட்டமிட்டு வருகிறது. இதற்கான நடவடிக்கைகளை மத்திய சட்டத் துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து வெளிவந்துள்ள அவ்வமைச்சகத் தகவல்கள் கூறுவதாவது: முதலில் நுழைவுத் தேர்வு நடைபெறும். அதில் தேர்ந்தெடுக்கப்பட்டோர் போபாலில் உள்ள தேசிய சட்ட அகாடமிக்கு இரண்டு ஆண்டு காலப் பயிற்சிக்கு அனுப்பப்படுவர். இதற்காகத் தனியாக பயிற்சி இன்ஸ்டிடியூட் அமைக்கப்படும். இந்தப் பயிற்சிக்கான திட்டங்கள், இந்திய சட்டக் கழகத்தால் விரைவில் உருவாக்கப்படும். பயிற்சி முடிந்த பின், அவர்கள் மாவட்ட கோர்ட்டிலிருந்து மாநில, மத்திய அரசுப் பணிகளில் பணியாற்ற முடியும். அரசுப் பணியில் இருக்கும் ஒருவர், நீதித் துறையில் சில ஆண்டுகள் மட்டும் பணியாற்ற வேண்டும் என்று விரும்பினால், அதற்கும் வழிவகை செய்யப்படும். அவர் மேல்மட்ட நீதித்துறைக்கும் செல்ல முடியும். அவர்கள் மேல்படிப்புகளுக்கும் அரசே செலவழிக்கும். அவர்களுக்கு குரூப்-ஏ பணிகளில் உள்ளவர்களுக்குச் சமமாக ஊதியம் அளிக்கப்படும். தற்போது, சட்டம் படித்தவர்கள் சட்டத்துறையில் ஆசிரியர்களாக அல்லது வக்கீல்களாக மட்டுமே செல்கின்றனர். மேலும் அவர்களுக்கும் குரூப் ஏ பணிகளில் உள்ளவர்களுக்கும் சமமான ஊதியமும் கிடைப்பதில்லை. ஐ.எல்.எஸ்., துவக்கப்பட வேண்டும் என்ற மத்திய அமைச்சகத்தின் முடிவுக்கு, இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. ஒன்று, புதிய பொருளாதாரக் கொள்கையால் மக்கள் வாழ்வில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், பல்வேறு அமைச்சகங்களிலும் அரசுத் துறைகளிலும், போதுமான சட்டத் துறை வல்லுனர்களுக்குப் பஞ்சம் வந்து விட்டது. அரசுத் துறைகளில் சிறந்த முறையில் சட்டங்களை உருவாக்கும் சட்ட வரைவு வல்லுனர்கள் குறைந்து போனது இரண்டாவது காரணம். தற்போது தனியார் நிறுவனங்கள், சட்ட வல்லுனர்களுக்குக் கவர்ச்சிகரமான ஊதியம் அளித்தாலும், அவர்களுக்குப் பரந்து விரிந்த நீதித்துறை அனுபவத்தைக் கொடுப்பது அரசு மட்டுமே. மேலும் அரசும் தனியார் துறைகளுக்குச் சமமாக ஊதியம் அளித்து வருகிறது என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும். இவ்வாறு அமைச்சகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.