நம்ம சென்னை புகைப்பட கண்காட்சி
எழும்பூர்: சென்னை, வியாசர்பாடி, டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக்கல்லுாரியின் விஸ்காம் எனும் காட்சி வழி தகவல் தொடர்பியல் துறை மாணவர்கள் சார்பில், எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில், நம்ம சென்னை என்ற தலைப்பில், புகைப்பட கண்காட்சி நேற்று நடந்தது.இந்த கண்காட்சியில், சென்னை மாநகராட்சியில் உள்ள, பழமையான சிவப்பு மற்றும் வெள்ளை வண்ண கட்டடங்களான சென்ட்ரல் ரயில் நிலையம், லைட் ஹவுஸ், சென்னை பல்கலை ரிப்பன் மாளிகை, எழும்பூர் ரயில் நிலையம், பழம்பெருமை வாய்ந்த கோவில்களான காளிகாம்பாள் கோவில், கபாலீஸ்வரர் கோவில், மருந்தீஸ்வரர் கோவில் மற்றும் நினைவு சின்னங்களான போர் நினைவுச் சின்னம் உள்ளிட்ட 90க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.இந்த கண்காட்சியை, பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மத்திய மக்கள் தொடர்பகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை திறந்து வைத்து மாணவர்களை பாராட்டினார். புகைப்படங்கள், ஒவ்வொன்றிலும் அதன் வரலாறுகளும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் கல்லுாரி முதல்வர் பிரகாஷ், விஸ்காம் துறைத் தலைவர் ஜெபகுமார், பேராசிரியர் ராஜீ உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேராசிரியர் தேவேந்திரன் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டார்.