பொக்கிஷ பொருட்களை காட்சிப்படுத்தும் பட்டதாரி
கோபி: ஈரோடு மாவட்டம் கோபி தாலுகா, பங்களாப்புதுாரை சேர்ந்தவர் சுப்பிரமணியன், 35; எம்.ஏ.,(வரலாறு), பி.எட்., பட்டதாரி; கோபி அருகே புஞ்சை துறையம்பாளையத்தில் இயங்கும், போட்டித்தேர்வு இலவச பயிற்சி மைய முதல்வராக பணியாற்றுகிறார்.சிறுவயது முதல், காண கிடைக்காத, அரியவகை பொருட்களை சேகரித்து, அதை அரசு பள்ளி, மாணவ, மாணவியருக்கு இலவசமாக காட்சிப்படுத்தும் வழக்கத்தை கொண்டுள்ளார்.இவரிடம் நுாறு ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்ட விதவிதமான கேமராக்கள், கிராம போன், ரெக்கார்டு பிளேயர், ரேடியோ, பிரிட்டிஷ் கால வாசனை திரவிய புட்டிகள், மரப்பாச்சி பொம்மை, வீர யானைகள், இசைக்கருவிகள், மின்சார பொருட்கள், மினி டைப்ரைட்டிங் மெஷின், பித்தளை கூஜாக்கள் உள்ளிட்டவை வைத்துள்ளார்.மேலும் பெட்ரோமாக்ஸ் விளக்குகள், தமிழக விளக்குகள், பெல்ஜியம் கண்ணாடி விளக்கு, காமாட்சி விளக்குகள், பாக்கு வெட்டிகள், பல்லாங்குழி, கல் பீரங்கி குண்டுகள், குமுட்டி அடுப்பு, கத்தி உறை, எடைக்கற்கள், வெள்ளி நாணயங்களையும் பொக்கிஷமாக பாதுகாத்து வைத்துள்ளார். இந்த பொருட்களை கோபி, காந்தி கல்வி நிலையம் (நிதியுதவி) மேல்நிலைப்பள்ளியில், சமீபத்தில் காட்சிபடுத்தினார்.இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்த அரியவகை பொருட்களை, 14 வயதிலிருந்து சேகரிக்கிறேன். என் தாய்மாமா கார்த்திகேயன், அவர் பயன்படுத்திய கேமரா பயன்பாட்டை எனக்கு கற்று கொடுத்தார். அந்த ஊக்கத்தின் காரணமாக தான், இதுபோன்ற பொருட்களை சேகரித்து வைத்துள்ளேன்.எனக்குப் பின் இதுகுறித்து என் இரு மகன்களுக்கும், அதன் அருமை மற்றும் பெருமைகளை புரிய வைக்க திட்டமிட்டுள்ளேன். இலவச அருங்காட்சியகம் அமைக்கும் யோசனையும் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.