வரலாற்று சிறப்பு நாணயங்கள் கண்காட்சி
கோவை: காந்திபுரம், ராம்நகரில் உள்ள தனியார் மண்டபத்தில், பழங்கால நாணயங்கள் மற்றும் பழம்பொருள் கண்காட்சி மற்றும் விற்பனை நடந்தது.கண்காட்சியில் சங்க கால நாணயங்கள் முதல் தற்போதைய நாணயங்கள் வரை விற்பனைக்கும் காட்சிக்கும் வைக்கப்பட்டிருந்தன. மேலும், பண நோட்டுகள், ஸ்டாம்ப், ஓவியங்கள், பழம்பொருட்கள் இடம்பெற்றிருந்தன.நாணய சேகரிப்பாளர் சாம்சன் கூறியதாவது:முற்கால சேர, சோழ, பாண்டிய, மலையமான் அரசுகளின் நாணயங்கள் முதல், தற்போதைய நாணயங்கள் வரை அனைத்தும் இடம்பெற்றுள்ளன.தமிழகத்துடன் வணிகம் செய்த யவனர்களின் ரோம, கிரேக்க நாணயங்கள், இந்தோ கிரேக்க நாணயங்கள், பெர்சிய, போர்ச்சுகீஸ், டேனிஷ், டச்சு, ஆங்கிலேய, பிரெஞ்சு நாணயங்கள், விஜயநகர பேரரசு, மைசூர் உடையார் காலம் என, வரலாற்றுச் சிறப்பு மிக்க நாணயங்கள் இடம்பெற்றுள்ளன.கிழக்கிந்திய கம்பெனி, 18ம் நூற்றாண்டின் இறுதி, 19ம் நூற்றாண்டின் துவக்கத்தில், முதன்முதலில் அச்சடித்து வெளியிட்ட நாணயங்களில், எழுத்தை தலைகீழாக பிழையுடன் வெளியான நாணயங்கள் என, அரிய வகை நாணயங்களும் உள்ளன.நாணய சேகரிப்பாளர்களிடம் இனம்காண முடியாத நாணயம் இருப்பின், அவற்றை அடையாளம் காணவும், தொகுத்து தரவும் உதவுகிறோம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.