திருப்பூரிலும் ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
திருப்பூர்: தமிழ்நாடு பதிவுமூப்பு இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கையை வலியுறுத்தி, காத்திருப்பு போராட்டம் துவக்கினர்.திருப்பூர் தொடக்க கல்வி அலுவலகம், பழைய நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வெளிவளாகத்தில் மாவட்டம் முழுதும் இருந்து நுாற்றுக்கணக்கான ஆசிரியர்கள் நேற்று மதியம் திரண்டனர். திடீரென அதிகளவில் ஆசிரியர்கள் திரண்டதால், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கூறியதாவது:'தி.மு.க. தேர்தல் வாக்குறுதி எண்: 311ல், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் களையப்படும்,' என தெரிவிக்கப்பட்டது. 2009 முதல், 16 ஆண்டுகளாக தொடர் போராட்டங்கள் நடத்தியும் அரசு செவிசாய்க்கவில்லை.அரையாண்டு தேர்வு விடுமுறையில் சென்னையில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தினோம். அமைச்சர் தரப்பில் நிறைவான பதில் தரவில்லை. அடுத்த கட்ட முடிவு அரசு அறிவிக்கும் வரை மாவட்ட அளவில் காத்திருப்பு போராட்டங்களை துவக்கியுள்ளோம்,' என்றனர்.காத்திருப்பு போராட்டத்துக்கு வட்டார தலைவர்கள் ஸ்ரீதர், லிங்குராஜ் தலைமை வகித்தனர். தெற்கு வட்டார பொறுப்பாளர் மாதவி செல்வி, கோரிக்கைகளை விளக்கிப்பேசினர். மதியம் துவங்கிய போராட்டம், மாலை வரை தொடர்ந்தது.