தமிழக சிறைச்சாலைகளில் தொழிற்கல்வி நிலையம்
தமிழக சிறைச்சாலைகளில் ஏற்கனவே துவங்கி வெற்றிகரமாக செயல்பட்டு வரும் சமுதாயக் கல்லூரிகளைத் தொடர்ந்து, சிறைக் கைதிகளுக்கு வேலை வாய்ப்பிற்கான தொழிலைக் கற்றுத் தரும் வகையில் தற்போது தொழிற்கல்வி பயிற்சி மையம் துவக்கப்பட உள்ளது என்று காவல்துறை கூடுதல் தலைமை இயக்குனர் மற்றும் சிறைத்துறை தலைமை ஆய்வாளர் ஜே.கே. திரிபாதி தெரிவித்தார். திருச்சியில் சிறைச்சாலை வார்டர்களுக்கான பயிற்சி மையத்தை துவக்கி வைத்து பேசிய திரிபாதி, ஆயுதம் இல்லாத உலகத்தை உருவாக்கும் விதத்தில், சிறைச்சாலையில் இருப்பவர்களும் இந்த சமுதாயத்தில் எளிதாக வாழும் வகையில் மகாத்மா காந்தி சமுதாயக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டன. அவை வெற்றிகரமாக இயங்கி வருகிறது. இதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக அரசு கல்வி மையங்களின் உதவியுடன் ஐ. டி. ஐ.கள் துவக்கப்பட உள்ளன. இதில் குறுகிய கால மற்றும் நீண்ட கால பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று அவர் கூறினார். தற்போது தொழிற் பயிற்சி மையங்களில் அதிக வரவேற்பு பெரும் பயிற்சிகளை கண்டறிந்து அவை இங்கு நடத்தப்படும் என்றும், அரசு ஐ. டி. ஐ.களுடன் கலந்துரையாடிய பிறகு தான் ஆசிரியர்கள் மற்றும் ஆய்வுக் கூடங்கள் முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தற்காலிக பயிற்சி மையத்தை துவக்கி வைத்து பேசிய திரிபாதி, தொழிற் பயிற்சி என்பது அவர்களது பயத்தை போக்கி, ஒன்றாக சேர்ந்து செயல்படும் திறனை வளர்த்து, அவர்களுக்குள் இருக்கும் தனித் திறமையை வளர்க்கும் விதத்தில் அமையும் என்றார். பயிற்சியின் போது உடலுழைப்பு தான் சற்று கடினமானதாக இருக்கும். உடல் பலம் மட்டும் அல்லாமல், மன பலத்தையும் இந்த பயிற்சியின் போது அவர்கள் பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.