தொழிற்கல்வி விண்ணப்ப கட்டணத்தை குறைக்கலாமே
இன்ஜினியரிங், மருத்துவம் போன்ற தொழிற்கல்வி படிப்புக்கான விண்ணப்பங்களின் விலையை குறைக்க வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தொழிற்கல்வி படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம் மே 16ம் தேதி துவங்குகிறது. அண்ணா பல்கலை இந்த விண்ணப்பங்களை வினியோகித்து, மாணவர்கள் சேர்க்கைக்கான கவுன்சிலிங்கையும் நடத்துகிறது. இதற்கான விண்ணப்பத்தின் விலை ரூ.500 என்ற அளவில் இருப்பது குறித்து பெற்றோர் பலர் அதிருப்தி தெரிவிக்கின்றனர். அண்ணா பல்கலை ஒன்றே கால் லட்சத்திற்கும் மேல் விண்ணப்பத்தை வினியோகிக்க உள்ளது. ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ. 500 என்றால், ரூ. 6 கோடி அளவுக்கு வருமானம் கிடைக்கும். தொழிற் கல்வி படிப்புகளுக்கு முன்பெல்லாம் நுழைவுத் தேர்வு இருந்தது. அப்போதும் இதே விலைதான் இருந்தது. இப்போது நுழைவுத் தேர்வு கிடையாது. நேரடியாக கவுன்சிலிங் செல்கின்றனர். சென்னையில் மட்டும் நடக்கும் கவுன்சிலிங் பணியில் பல ஊழியர்கள், கம்ப்யூட்டர்கள் ஈடுபடுவர். இதற்கு இந்தளவு விண்ணப்பத்திற்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டுமா என பெற்றோர் குமுறுகின்றனர். கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு ரூ.500 பெரிய தொகை. அத்துடன் தென்கோடி மாவட்ட மாணவர்கள் சென்னை சென்று, ரூ.5000 கட்டணம் செலுத்தி கவுன்சிலிங்கில் பங்கேற்க மேலும் செலவிட வேண்டியுள்ளது. நுழைவுத் தேர்வு இருந்தாலாவது வினா, விடைத்தாள், தேர்வு மையம், திருத்தும் செலவு என பல செலவினங்களை சந்திக்க வேண்டியதிருக்கும். அதுவும் இல்லை. எனவே விண்ணப்ப கட்டணத்தை வெகுவாக குறைக்கலாம். தனியார் பல்கலைகள்தான் வருவாய் ஈட்டும் நோக்கில் நடந்து கொள்கின்றன என்றால், அரசு நிறுவனமான அண்ணா பல்கலையும் அதேபோல நடந்து கொள்வதை தவிர்க்கலாம் என்கின்றனர்.