நுழைவுத் தேர்வு குழப்பத்தில் சி.பி.எஸ்.இ.
கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள்கள் வெளியானதால் ஏற்பட்ட பிரச்சினையைத் தொடர்ந்து தற்போது சி.பி.எஸ்.இ. மற்றொரு புதிய சிக்கலை எதிர்கொண்டுள்ளது. வினாத்தாள் வெளியானதைத் தொடர்ந்து, தேர்வுகள் காலதாமதமாகத் துவங்கின. இதையடுத்து மறுதேர்வு மே 11ஆம் தேதி நடத்தப்படும் என்று கடந்த செவ்வாய்க்கிழமை சி.பி.எஸ்.இ. அறிவித்தது. இதில்தான் புதிய சிக்கலே ஆரம்பமானது. மறுதேர்வில் எந்த மாணவர்களை அனுமதிப்பது என்பதுதான் அது. சி.பி.எஸ்.இ. நிர்வாகம், தேர்வு காலதாமதமானதால் எழுத முடியாமல் போன மாணவர்களுக்காகவே இந்த மறு தேர்வை அறிவித்தது. ஆனால், தேர்வு எழுதிய மாணவர்களின் பெற்றோர்கள், அன்றைய தினம் தேர்வெழுதிய மாணவர்களையும் மறு தேர்வில் அனுமதிக்க வேண்டும் என்று கோரி வழக்குத் தொடர்ந்துள்ளனர். காலதாமதம், வெயிலில் அதிக நேரம் நின்றது போன்ற பல்வேறு பிரச்சினைகளால் அன்றைய தினம் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் அவர்கள் தேர்வெழுதியுள்ளனர். எனவே, அவர்களையும் மறு தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் தேர்வெழுதாத மாணவர்களின் பெற்றோர், தேர்வெழுதிய மாணவர்கள், கேள்வி முறை தெரிந்திருப்பதால் இரண்டாவது முறை இன்னும் சிறப்பாக தேர்வெழுத வாய்ப்புள்ளது. இதனால் முதல் முறையாக தேர்வெழுதும் மாணவர்கள் குறைந்த மதிப்பெண் பெறும் நிலை ஏற்படும். எனவே, மறு தேர்வில், தேர்வெழுதாத மாணவர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். மொத்தம் 12 லட்சம் மாணவர்கள் தேர்வெழுத இருந்தனர். இதில் சுமார் 32,000 பேரால் அன்றைய தினம் தேர்வெழுத முடியவில்லை. இதையடுத்து, இந்த 12 லட்சம் மாணவர்களுக்கும் மறு தேர்வு நடத்துவதா அல்லது வெறும் 32,000 பேருக்கு மறு தேர்வு நடத்துவதா என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது சி.பி.எஸ்.இ. நிர்வாகம்.