ஆய்வுப் படிப்புகளுக்கு செப்டம்பர் 14-ல் நுழைவுத்தேர்வு
பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் நுழைவுத் தேர்வு மூலம் எம்.பில்., பிஹெச்.டி. ஆய்வுப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) விதிகளைப் பின்பற்றி பாரதியார் பல்கலைக்கழகம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மத்திய, மாநில அரசு பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் எம்.பில்., பிஹெச்.டி. ஆய்வுப் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தி மாணவர்களை சேர்த்துக் கொள்ள பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகளை வகுத்துள்ளது. கடந்த 2009-ல் கொண்டு வரப்பட்ட விதிமுறைகளின் கீழ் இப்போது கோவை பாரதியார் பல்கலைக்கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக, பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்களின் முதல்வர், இயக்குநர்களுக்கு பல்கலைக்கழகப் பதிவாளர் பி. திருமால்வளவன் கடிதம் அனுப்பியுள்ளார். பல்கலைக்கழக மானியக் குழு, இளநிலை ஆய்வு மாணவர் தேர்வு அறிவியல் தொழில்துறை ஆய்வு கவுன்சில், கல்லூரி ஆசிரியர் பணியிடங்களுக்கான மாநில அளவிலான தகுதித் தேர்வு (செட்), எம்.பில். முடித்த மாணவர்களின் முதுநிலைப் படிப்பில் பெற்ற மதிப்பெண்களை 85 சதவீதத்துக்கு கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். மீதியுள்ள 15 சதவீதத்தை நேர்காணலுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இதர மாணவர்களுக்கு முதுநிலைப் படிப்பில் பெற்ற மதிப்பெண்களை 50 சதவீதமாகவும், மீதி 35 சதவீதத்தை எழுத்துத் தேர்வுக்கும், 15 சதவீதத்தை நேர்காணலுக்கும் எடுத்துக்கொள்ள வேண்டும். மாணவர்களின் ஒட்டுமொத்த மதிப்பெண்களைக் கொண்டு ரேங்க் பட்டியல் தயாரிக்க வேண்டும். தேர்வு, நேர்காணல், வினாத்தாள் தயாரித்தல் உள்ளிட்டவற்றை செப்டம்பர் 20-ம் தேதிக்குள் முடித்துக்கொள்ள வேண்டும். பிஹெச்.டி. ஆய்வுப் படிப்பு மாணவர்களின் இறுதிப் பட்டியலைத் தயாரிப்பதற்கு முன்பாக பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கை விதிகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரதியார் பல்கலையில் உள்ள முதுநிலை துறைகளில் எம்.பில்., பிஹெச்.டி. ஆய்வுப் படிப்புகளுக்கு செப்டம்பர் 14-ல் நுழைவுத்தேர்வு நடத்தப்பட உள்ளது.