கண்மாயில் மூழ்கி பிளஸ் 2 மாணவர்கள் பலி
காரைக்குடி: காரைக்குடி அருகே கண்மாயில் குளிக்க சென்ற, பிளஸ் 2 மாணவர்கள் 2 பேர், நீச்சல் தெரியாததால், நீரில் சிக்கி பலியாயினர். காரைக்குடி அருகே பேயன்பட்டியில், சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால், கருங்காலி கண்மாய் நிரம்பியது. இந்த கண்மாயில், நேற்று காலை 9.30 மணிக்கு, காரைக்குடி தனியார் பள்ளியின், பிளஸ் 2 மாணவர்களான, கழனிவாசல் முகம்மது அபுபக்கர் மகன் முகம்மது இக்பால், 16, பர்மா காலனி பெரியார் நகர் சீனிவாசன் மகன் பாலமுருகன்,16, கழனிவாசல் புகழேந்தி தெரு தங்கராஜ் மகன் ராஜா,16, ஆகிய மூவரும் குளிக்க சென்றனர். முகம்மது இக்பால் கரையில் நிற்க, நீச்சல் தெரியாத மற்ற இருவரும் தண்ணீரில் இறங்கினர். 10 அடி தூரம் சென்ற பின், பள்ளத்தில் சிக்கி தண்ணீரில் தத்தளித்தனர். கரையில் நின்ற முகம்மது இக்பால், அருகில் உள்ளவர்களை அழைத்து வருவதற்குள், இருவரும் தண்ணீரில் மூழ்கி விட்டனர். காரைக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் சேகர் தலைமையில் வீரர்கள், இருவரது உடலையும் மீட்டனர். இந்த கண்மாயில், சில மாதங்களுக்கு முன்பு, திருச்சி - காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை பணிக்காக, அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக ஆழத்தில், மணல் எடுக்கப்பட்டது. பேயன்பட்டி கிராம மக்கள் லாரியை முற்றுகையிட்டு,போராட்டத்தில் ஈடுபட்டதால், மணல் எடுப்பது நிறுத்தப்பட்டது. இந்த பள்ளத்தில் சிக்கித் தான் மாணவர்கள் பலியாயியுள்ளனர். அவர்களில், பாலமுருகன் தந்தை சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். மகனுக்கும் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றுள்ளார். அந்நாட்டு குடியுரிமை சட்டத்தின்படி, பிளஸ் 2 முடித்து, ஓராண்டு ராணுவத்தில் பயிற்சி புரிய வேண்டுமாம். இதன்படி, பாலமுருகன், இந்த ஆண்டு முடிந்தவுடன், சிங்கப்பூர் செல்ல இருந்தார்.