குஜராத், ம.பி.,யில் பிளஸ் 2 தேர்வுகள் ரத்து
புதுடில்லி: சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, குஜராத் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களிலும் பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.கொரோனா 2வது அலை காரணமாக சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்த தேர்வு தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். இதனை தொடர்ந்து, பிளஸ் 2 தேர்வு குறித்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. இதில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, பிரகாஷ் ஜாவடேகர் மற்றும் முக்கிய உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர், பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், மாணவர்களின் நலன் கருதி சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.இந்நிலையில், குஜராத் மாநிலத்திலும் பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மாநில கல்வித்துறை அமைச்சர் புபேந்திர சின் சுதாசமா அறிவித்து உள்ளார். மத்திய பிரதேச மாநிலத்திலும் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்து உள்ளார்.