புதுமை பெண் திட்டம்: 2 ஆண்டுகளில் 3.28 லட்சம் மாணவியர் பயன்
சென்னை: புதுமைப்பெண் திட்டத்தில் இரண்டாண்டுகளில், 3.28 லட்சம் மாணவியர் பயனடைந்துள்ளனர்.தமிழக அரசின் இந்த திட்டத்தில், அரசு பள்ளிகளில் பிளஸ் 2 வரை படித்த மாணவியர், பட்டப் படிப்பிலோ, பட்டயப் படிப்பிலோ சேர்ந்தால், அவர்கள் அந்த படிப்பை முடிக்கும் வரை மாதந்தோறும், 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. மாணவியர் வேறு எந்த உதவித் தொகையை பெற்றாலும், இந்த உதவித் தொகையையும் பெற தகுதி உடையவர்.பொருளாதார பாதுகாப்புஅதேநேரத்தில், தொலை நிலை வழியாக உயர் கல்வியையோ அல்லது அங்கீகாரமில்லாத நிறுவனங்களில் உயர் கல்வியையோ பெறுவோருக்கு, இந்த உதவித்தொகை வழங்கப்படுவதில்லை. அந்த வகையில், இதுவரை, 3.28 லட்சம் மாணவியர் பயன் அடைந்துள்ளனர்.இதுகுறித்து சமூக நலத்துறை இயக்குனர் அமுதவல்லி கூறியதாவது: புதுமைப்பெண் திட்டத்தில், அரசு பள்ளிகளில் படித்த மாணவியர் பயன் பெறலாம். அதேபோல, தனியார் பள்ளிகளில், கல்வி உரிமை சட்டமான, ஆர்.டி.இ., வழியாக படித்த மாணவியரும் பயன் பெறலாம். இதுகுறித்த விழிப்புணர்வு அதிகம் இல்லாததால், ஏழை மாணவியராக இருந்தும், தனியார் பள்ளிகளில் படித்த காரணத்தால் விண்ணப்பிப்பதில்லை. எனவே, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.இந்த திட்டத்தால், உயர் கல்வியில் பெண்களின் எண்ணிக்கை ஓராண்டில், 27 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக, உயர்கல்வி துறை தெரிவித்துள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் உயர் கல்வியை தொடர முடியாமல் இடைநின்ற, 10,000த்திற்கும் மேற்பட்ட மாணவியர், மீண்டும் கல்வியை தொடர்வதும் தெரியவந்துள்ளது. மேலும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களில் பிறந்த பெண் குழந்தைகள், உயர் கல்வி கற்க வருவதால், குழந்தை திருமணங்கள் குறைவதோடு, பெண்களுக்கு எதிர்காலத்தில் பொருளாதார பாதுகாப்பும் கிடைக்கும்.உயரும் எண்ணிக்கைஇந்த திட்டத்தின் பயனை, படித்து பணிக்குச் செல்லும் பெண்களின் சராசரியை வைத்து தான், அடுத்தடுத்த ஆண்டுகளில் கூற முடியும். இதில் பயனடைந்த, 8,500க்கும் மேற்பட்ட மாணவியர், இந்தாண்டு படிப்பை முடித்துள்ளனர்.இதுவரை, 3 லட்சத்து, 28,390 பேர் பயனடைந்துள்ளனர். இதில், சேலம், திருவண்ணாமலை, நாமக்கல் மாவட்டங்களில் தொடர்ந்து, புதுமைப் பெண் திட்டம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து, பெண்கள் உயர் கல்வி பெறும் சதவீதம் அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.