அரசு பள்ளி மாணவர்கள் 50 பேர் இஸ்ரோ பயணம்
சேலம்: சேலம் மாவட்டத்தில் இருந்து, 2ம் கட்டமாக அரசு பள்ளி மாணவ, மாணவியர் 50 பேர் இஸ்ரோ மையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.கடந்த ஆண்டு, முன்னாள் ஜனாதிபதிஅப்துல்கலாமின், 91வது பிறந்தநாளையொட்டி பள்ளி கல்வித்துறை, சேலம் அரசு கலைக்கல்லுாரி, ஹார்ட்புல்நெஸ் தியான பயிற்சி மையம் சார்பில், அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு அறிவியல் கண்காட்சி நடந்தது. அதில், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். சிறப்பாக செயல்பட்ட, 100 பேர் தேர்வு செய்யப்பட்டு, பெங்களூருவில் உள்ள, இஸ்ரோ மையத்துக்கு சுற்றுலா அழைத்து செல்லப்படுவர் என அறிவிக்கப்பட்டது.முதல் கட்டமாக, ஆக., 12ல், 50 மாணவ, மாணவியர், இஸ்ரோ அழைத்து செல்லப்பட்டனர். 2ம் கட்டமாக, தேர்வு செய்யப்பட்ட, 50 மாணவ, மாணவியர் பிரத்யேக பஸ் மூலம் நேற்று முன்தினம் சேலத்தில் இருந்து இஸ்ரோவுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு, ராவ் மையம், சேட்டிலைட் தயாரிப்பு முறை உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர். அவர்களுடன் ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், கங்கையம்மாள், இளந்திரையன், ஹார்ட்புல்நெஸ் தியான பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் கஸ்துாரி வெங்கடாசலம் உள்ளிட்டோரும் சென்று வந்தனர்.