உள்ளூர் செய்திகள்

இளமையிலேயே தரப்படும் பயிற்சிதான்...

சுவாமி சிவானந்தர் இதுபற்றி சொல்லும்போது, “உங்கள் பாக்கெட்டில் எப்போதும் ஒரு குறிப்பு புத்தகத்தோடு ஒரு பென்சிலையும் வைத்திருங்கள். சுறுசுறுப்பான நபர்களும் அதிசய மனிதராகத் திகழ வேண்டும் என்ற எண்ணமுடையவர்களும், நடந்து கொண்டிருந்தாலும் சரி, வேறு ஏதேனும் செய்து கொண்டிருந்தாலும் சரி... ஒரு உயரிய எண்ணம் தோன்றிய அந்த நிமிடத்திலேயே அதே இடத்தில் குறிப்பெடுத்துக்கொள்ள வேண்டும். அதையும் சுருக்கெழுத்தில் அல்லது அவரவருக்கு புரியும் வகையில் குறித்துக் கொள்ள வேண்டும். பின்னர், நேரம் கிடைக்கும் போதெல்லாம் அந்த குறிப்புகளை உங்கள் நிரந்தர டைரியில் விரித்து எழுதிக் கொள்ள வேண்டும். இதுவே வெற்றியின் ரகசியம். வெறும் ஏட்டுப்படிப்பு மனிதனுக்கு உதவாது,” என்றார். உங்கள் ஊருக்குள்ளேயே பல விஷயங்களைப் பற்றி உங்களுக்கு தெரியாது. உதாரணமாக, உங்கள் ஊரின் மக்கள்தொகை என்னவென்று கேட்டால், எத்தனை பேர் உருப்படியாக பதில் சொல்வார்கள்? எனவே வெளியில் செல்லும்போது, உங்கள் கண், காதுகளை கூர்மையாக வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து அலுவலகங்களில் உள்ள போர்டில் இந்த விபரம் இருக்கும். இப்படி சிறிய விஷயங்கள் என்று நம்மால் ஒதுக்கப்பட்டவற்றைக் கூட தெரிந்து கொண்டால்தான், பெரிய விஷயங்களை நம்மால் சாதிக்க முடியும். அதுபோல், அறிஞர்கள் பேசும் கூட்டத்திற்கு செல்லும்போது அவர்கள் சொல்வதைக் கருத்துடன் கேளுங்கள். சிரத்தை எனப்படும் கவனமும் உங்களை உயர்த்தும் காரணிகளில் ஒன்று என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒருவருடன் பேசும்போது, அவரிடமிருந்து உருப்படியான தகவல் ஒன்று கிடைக்கிறது என்றால் உடனே உங்கள் குறிப்பு நோட்டில் எழுதி வைத்து விடுங்கள். குறித்தவைகளை வாரம் ஒருமுறையாவது திருப்பிப் பாருங்கள். இன்னொரு முக்கிய விஷயம். யாரொருவர் அதிகாலையில் சோம்பலின்றி எழப்பழகுகிறாரோ அவரும் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார். உங்கள் காலை நேரத்தை எப்படி திட்டமிட வேண்டும் தெரியுமா? தினமும் காலை 4.30 மணிக்கு எழுந்து, 20 நிமிடங்களுக்குள் காலைக்கடன் முடித்து, சிறிதுநேரம் கண்மூடி தியானம் செய்யுங்கள். பின் நீராடி பூஜை செய்யுங்கள். 6.30 - 7.30 அன்றைய செய்தித்தாள்களை புரட்டுங்கள். பிறகு, உங்கள் அன்றாடப் பணிகளைக் கவனிக்கத் தொடங்கி விடுங்கள். இது எப்படி சாத்தியம் என்பதற்கும் விடை இருக்கிறது. இரவில் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் உறங்கச் சென்று விட வேண்டும். பெற்றோர்களே! உங்கள் குழந்தைகளுக்கு இந்த வழக்கங்களை கற்றுக் கொடுங்கள். அதற்கு முன், நீங்கள் இந்த பழக்கங்களைக் கொண்டிருக்க வேண்டுமே! நீங்களும் துவங்குங்கள் இதை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்