புதிய வேளாண் பாடத்திட்டம்!
தமிழ்நாடு வேளாண் பல்கலையில், 13 உறுப்பு, இணைப்பு கல்லுாரிகள், வேளாண் விரிவாக்க மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், இளம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகள் உள்ளன. இளம் அறிவியலில், வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், உணவு மற்றும் ஊட்டச்சத்து அறிவியல், வேளாண் பொறியியல், பட்டுவளர்ப்பு ஆகிய படிப்புகள்; இளம் தொழில்நுட்பவியலில், உயிர்தொழில்நுட்பவியல், உயிர்தகவலியல், வேளாண் தொழில் மேலாண்மை, வேளாண் தகவல் தொழில்நுட்பம், தோட்டக்கலை, உணவுபதன்செய் பொறியியல், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் உள்ளிட்ட படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் சார்பில், நான்காண்டுகளுக்கு ஒரு முறை, பாடத்திட்டம் மாற்றி அமைக்கும் முறை நடைமுறை உள்ளது. 2011ம் ஆண்டு மாற்றியமைத்த பாடத்திட்ட முறை, நான்காண்டுகள் முடிந்த நிலையில், நடப்பாண்டு புதிய பாடத்திட்டங்களுடன் கூடிய புத்தகங்கள், மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. வேளாண் பலகலை டீன் மகிமைராஜா கூறுகையில், நடைமுறை தகவல்களோடு, எதிர்கால பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும், நவீன தொழில்நுட்ப ரீதியில், பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. 2011ம் ஆண்டில், அறிமுகப்படுத்தப்பட்ட பாடத்திட்டங்களோடு நடப்பாண்டு பாடத்திட்டத்தை ஒப்பிடுகையில், கூடுதல் செய்முறை பயிற்சி மற்றும், பட விளக்கங்களுடன் கூடிய கருத்துகளே அதிகம் உள்ளன. தவிர, மாணவர்களுக்கு, ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் மீது ஆர்வம் ஏற்படுத்தும் வகையிலும், வேளாண் சார்ந்த நிலவரத்தை எடுத்து கூறுவதுமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில், ஒவ்வொரு துறையிலும், ஒரு பாடத்துக்கு இரண்டு புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன, என்றார்.