வேர்களை கொண்டாடும் விழுதுகள்!
மனம் போன போக்கில் செல்லாமல், என்ன செய்ய வேண்டும் என்பதை சுதந்திரமாக தேர்வு செய்து செயல்படக் கூடியவர்களாக விளங்க வேண்டும். வாழ்க்கையின் பொருள் என்னவென்பதையும், வாழ்வின் நோக்கம் என்னவென்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.இப்படி சொன்னவர், இன்றைய நாளின் சிறப்புக்கு சொந்தக்காரரான சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன். நாட்டின், 2வது குடியரசு தலைவராக விளங்கியவர். கல்விப்பணியில், கலங்கரை விளக்கமாக விளங்கியவர். அவரது பிறந்தநாளான இன்று, நாடெங்கும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.மழலைத்தனம் மாறாமல், வகுப்பறை வாசலுக்குள் நுழையும் பிஞ்சுக் குழந்தைகளுக்கு தமிழ், ஆங்கில அகர வரிசையை கற்றுத்தரும், நர்சரி பள்ளி ஆசிரியைகள் இடும், அடித்தளம் தான், ஒரு குழந்தையின் அடுத்தடுத்த வளர்ச்சிக்கான அஸ்திவாரமாக இருக்கிறது.துவக்க கல்வி, நடுநிலை, மேல்நிலை மற்றும் உயர்நிலை கல்வி என, கல்விக்கூடங்களில் ஆண்டுகளை செலவிடும் அந்த காலகட்டம் தான், சமுதாயத்தின் சிறந்த குடிமகன்கள், குடிமகள்கள் உருவாகின்றனர்.ஒழுக்கம், கட்டுப்பாடு, கல்வி என, அனைத்திலும் சிறந்து விளங்கும் மாணவ, மாணவியர் மேல் படிப்பு முடித்து, நல்ல வேலை வாய்ப்பு பெற்று, சமுதாயத்தில் தங்களுக்கான ஒரு அடையாளத்தை, அங்கீகாரத்தை பெற்றுக் கொள்கின்றனர்.இத்தகைய சமுதாயம் தான், தங்களின் குடும்பத்தை வறுமையில் இருந்து துாக்கி நிறுத்தி, வளமையான பாதையில் அழைத்துச் செல்கின்றன. இப்படிப்பட்ட மாணவ சமுதாயத்தை உருவாக்கும், உன்னத பணி செய்யும் ஆசிரியர்களை கொண்டாடும் நாள் தான் இன்று.ஒரு காலத்தில், சாலச்சிறந்த பணியாக கருதப்பட்ட கல்விப்பணி, இன்று, சவால் நிறைந்ததாக மாறியிருக்கிறது. சமத்துவம், சகோதாரத்துவம், சகிப்புதன்மை, குறிக்கோள் வகுத்தல், தலைமை பண்பு உள்ளிட்ட நற்பண்புகளை வளர்க்கும் அழகிய பூஞ்சோலைகளாக பள்ளிகள் இருந்தன.ஆனால், இன்று, மாறிப்போன சில மாணவர்களின் மனநிலையால் ஆசிரியர்களுக்கு பிரச்னை; தன்நிலை மறக்கும் சில ஆசிரியர்களால், மாணவர்களுக்கு மன உளைச்சல் என, பெரும்பாலான இடங்களில் கண்ணியம் இழந்து, இணக்கமான சூழல் இல்லை.இவையெல்லாம் மாற்றப்பட வேண்டும்; இந்தாண்டை ஆசிரியர் தினத்தில், கல்வியாளர்களை மேம்படுத்துதல்: பின்னடைவை வலுப்படுத்துதல்; நிலைத்தன்மையை உருவாக்குதல் என்ற கருத்து கருப்பொருளாக வழங்கப்பட்டிருக்கிறது.வேர்களாக விளங்கும் ஆசிரியர்களுக்கு விழுதுகளாக உருவெடுக்கும் மாணவர்கள் இன்று விழா எடுக்கின்றனர். அடித்தளமாக உள்ள வேர்களின் ஊக்குவிப்பால் வளர்ந்து நிற்கும் விழுதுகள், வலுவான, வளமான, நலம் மிகு சமுதாயம் உருவாக்க நாமும் வாழ்த்துவோம்!