கிராமத்தை புறக்கணிக்கும் ஆசிரியர்கள்
சிவகங்கை: அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரிய, ஆசிரியர்கள் ஆர்வம் காட்டாததால், இத்திட்டம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தேசிய இடைநிலை கல்வி திட்டம் மூலம், கல்வியில் பின்தங்கிய ஒன்றியங்களில் மாதிரிப்பள்ளி திட்டத்தை, அரசு கொண்டு வந்தது. இதற்காக ஈரோடு, சேலம், கரூர், கிருஷ்ணகிரி, சிவகங்கை, நாமக்கல், விழுப்புரம் உட்பட 10 மாவட்டங்களில், 18 ஒன்றியங்கள் தேர்வு செய்யப்பட்டன. நடப்பு கல்வி ஆண்டு முதல் பள்ளிகள் துவக்கப்பட்டு, நவீன வசதியுடன் கட்டடங்கள் கட்டப்படுகின்றன. ஒரு பள்ளிக்கு தலைமை ஆசிரியர், ஏழு முதுகலை, ஐந்து பட்டதாரி ஆசிரியர்கள் என 17 பேர் தேவை. இதற்காக பி ப்., 2 ல் அந்தந்த மாவட்டங்களில் கவுன்சிலிங் நடந்தது. ஆனால், இத்திட்டத்தில் பணிபுரிய ஆசிரியர்கள் முன்வரவில்லை. சில மாவட்டங்களில், கல்வி அலுவலர்களின் முயற்சியால், சில ஆசிரியர்கள் மட்டுமே விருப்பம் தெரிவித்தனர். கிராமங்களில் இப்பள்ளி செயல்படுவதால், ஆசிரியர்கள் செல்ல மறுப்பதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், கிராம மாணவர்களுக்கு, கல்வி எட்டாக்கனியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.