பள்ளி மாணவர்கள் 1,500 பேர்: ரோட்டரி தடகளத்தில் அசத்தல்
சென்னை: ரோட்டரி கிளப் நடத்திய தடகள போட்டியில், 1,500 மாணவ, மாணவியர் பங்கேற்று அசத்தினர்.ரோட்டரி மாவட்டம் 3233 சார்பில், 'ரோட்டரி மாவட்ட ஒலிம்பியாட் - 2026' தடகள போட்டி, எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது. சென்னை மாநகராட்சி நடத்தும் பள்ளிகளில் 81ல் இருந்து 1,500 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.இதில், 100, 200, 400 ஓட்டம், 4 x 100 மீட்டர் தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல் உட்பட வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. இவற்றில் வெற்றி பெற்ற 140 வீரர், வீராங்கனையருக்கு பரிசு, பதக்கங்கள் வழங்கப்பட்டன.சென்னை மாநகராட்சிப் பள்ளிகளைச் சேர்ந்த 75 உடற்கல்வி ஆசிரியர்கள், இப்போட்டிகளை ஒருங்கிணைந்து நடத்தினர். விளையாட்டு வசதிகள் கிடைக்காத எளிய பின்னணியை உடைய மாணவ, மாணவியர், தங்களது திறமைகளை வெளிப்படுத்த, இப்போட்டி நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.