இன்ஜி., 2ம் கட்ட கவுன்சிலிங் 50,451 பேருக்கு சேர்க்கை ஆணை
சென்னை: இன்ஜினியரிங் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில், 50,451 மாணவர்களுக்கு சேர்க்கைக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் இன்ஜினியரிங் கல்லுாரிகளில் உள்ள, 1.80 லட்சம் இடங்களுக்கான ஆன்லைன் கவுன்சிலிங், கடந்த மாதம் முதல் இரண்டு கட்டங்களாக நடந்துள்ளது. முதல் சுற்றில், 19,922 மாணவ, மாணவியர் சேர்ந்தனர்.கடந்த 10ம் தேதி துவங்கிய இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில், 77,948 பேர் பொதுப்பிரிவில் பங்கேற்றதில், 62,270 பேர் விருப்ப இடங்களை தேர்வு செய்தனர். அவர்களில், 55,875 பேருக்கு, தற்காலிக ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டன.இதில், அரசு பள்ளிகளுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டின்படி, 9494 பேர் தகுதி பெற்றனர். அவர்களில், 8738 பேர் விருப்ப இடங்களை தேர்வு செய்தனர். அவர்களில் 7854 பேருக்கு தற்காலிக ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்பட்டன.இதன்படி, பொதுப் பிரிவு கலந்தாய்வில், 31,639 பேர்; அரசு பள்ளி மாணவர்களில், 5278 பேர் என, 36,917 பேருக்கு இறுதி ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டுள்ளது. இவர்கள், வரும் 20ம் தேதிக்குள் கல்லுாரிகளில் சேர வேண்டும். சேராவிட்டால், தற்காலிக ஆணை பெற்று கட்டணம் செலுத்தி காத்திருப்போருக்கு, வரும் 23ம் தேதி ஒதுக்கப்படும்.பொதுப்பிரிவில். 11,851 பேர்; அரசு பள்ளி மாணவர்களில், 1682 பேர் என, 13,534 பேருக்கு தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள், 20ம் தேதிக்குள் கிடைத்த இடங்களை உறுதி செய்து கட்டணம் செலுத்த வேண்டும். அந்த வகையில் மொத்தம், 50,451 பேருக்கு, சேர்க்கை ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.