உள்ளூர் செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு: 32 விழுக்காட்டினர் எழுதவில்லை

திருநெல்வேலி: தமிழகம் முழுவதும் இன்று நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வில் 32 சதவீதம் பேர் தேர்வெழுதாமல் விட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் டிஎன்பிஸ்சி குரூப் 2 தேர்வு நடந்தது. 2 ஆயிரத்து 846 பதவியிடங்களுக்கான தேர்வில் பங்கேற்க 6 லட்சத்து 32 ஆயிரத்து 672 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்காக தமிழகம் முழுவதும் 114 மையங்களில் காலை 10 மணி முதல் பகல் ஒரு மணிவரையிலும் எழுத்து தேர்வு நடந்தது. தேர்வினை கண்காணிக்க மாவட்ட கலெக்டர்கள் உத்தரவின் பேரில், பல்வேறு அதிகாரிகளின் குழுக்கள் செயல்பட்டன. தேர்வு நடந்த மையங்கள் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டு முறைகேடுகள் நடக்காமல் கண்காணிக்கப்பட்டன. ஆனால் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையில் வந்தவர்கள் குறைவாகவே இருந்தது. நெல்லை மாவட்டத்தில் 28 ஆயிரத்து 374 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 19 ஆயிரத்து 383 பேர் மட்டுமே தேர்வெழுதினர். 8 ஆயிரத்து 991 பேர் வராமல் இருந்துள்ளனர். ஏறக்குறைய 32 சதவீதம் பேர் பங்கேற்வில்லை. தமிழகம் முழுவதுமே இத்தகைய நிலை இருந்துள்ளது. இதே நாளில் உளவுத்துறை இளநிலை அதிகாரி, ஸ்டேட் பாங்க் அதிகாரிக்கான தேர்வு உள்ளிட்ட தேர்வுகள் இருந்ததால் இந்த புறக்கணிப்பா அல்லது வழக்கம்போல விண்ணப்பித்துவிட்டு தேர்வுக்கு தயாரிக்க முடியாமல் வரவில்லையா என்பது கேள்விக்குறியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்