பல்கலை ஊழியர்கள் 3வது நாளாக போராட்டம்
கோவை: பாரதியார் பல்கலையில், இ.எஸ்.ஐ., சட்ட விதிகளை மீறி ஊழியர்களின் சம்பளத்தில் நிலுவைத்தொகையை பிடித்தம் செய்ததைக் கண்டித்து, 300க்கும் மேற்பட்ட தற்காலிக ஊழியர்கள் மூன்றாவது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.10 - 20 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தும் தற்காலிக பணியாளர்களுக்கு இ.எஸ்.ஐ., சந்தா தொகை பிடித்தம் செய்யப்படாமல் இருந்தது. புகாருக்கு பின், 2019 செப்., முதல் 2025 மார்ச் வரை ஊழியர் மற்றும் நிறுவன பங்களிப்பு உள்ளிட்ட நிலுவைத்தொகையை, கடந்தாண்டு நவ., மாதம் பல்கலை நிர்வாகம் இ.எஸ்.ஐ., கழகத்தில் செலுத்தியது.ஊழியர்களின் பங்களிப்புத் தொகையை வசூலிக்கும் வகையில், ஜூலை சம்பளத்தில் ரூ.1,000 முதல் ரூ.2,500 வரை பிடித்தம் செய்யப்பட்டதாக தெரிகிறது.ஆக., சம்பளத்திலும் பிடித்தம் தொடர்ந்ததால், அதிருப்தியடைந்த ஊழியர்கள் கடந்த 7ம் தேதி முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.பிடித்த தொகையை திரும்ப வழங்கக் கோரி, மூன்றாவது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது.