மே 1ம் தேதி மருத்துவ கல்லூரிகளை தர மதிப்பீடு செய்யும் பணி
சென்னை: தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகளை தர மதிப்பீடு செய்யும் பணி, மே 1ம் தேதி முதல் துவக்கப்படுகிறது. இத்தர மதிப்பீட்டிற்கு தயாராக கல்லூரிகளுக்கு மூன்று மாத அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலைக் கழகம், தனது கட்டுப்பாட்டில் இயங்கும் மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் இந்திய மருத்துவக் கல்லூரிகளை தர மதிப்பீடு செய்ய முடிவு செய்துள்ளது. இத்தர மதிப்பீட்டின் முடிவில், கல்லூரிகளுக்கு தகுதிக்கேற்ப ஐந்து, நான்கு, மூன்று நட்சத்திர அந்தஸ்து வழங்கப்படும். கல்லூரிகளை தர மதிப்பீடு செய்யும் பணியை, அப்பணியில் அனுபவம் வாய்ந்த தனியார் நிறுவனத்திடம் வழங்க, பல்கலை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில், கல்லூரிகளை தர மதிப்பீடு செய்வது தொடர்பாக கல்லூரிகளின் முதல்வர், தலைவர், தாளாளர்களுக்கு மருத்துவப்பல்கலை பதிவாளர் சுதாசேஷையன் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:இந்த தர மதிப்பீட்டு ஆய்வின் மூலம், கல்லூரிகள் தாங்கள் எந்த விஷயத்தில் பின் தங்கியுள்ளோம் என்பதை அறிந்து, அதில் மேம்பாடு அடைவதற்கான பணிகளை மேற்கொள்ள முடியும். நுணுக்கமான விவரங்கள் மற்றும் வல்லுனர்களின் ஆய்வு என, இரு முறைகளில் இந்த தர மதிப்பீட்டு ஆய்வு மேற்கொள்ளப்படும். இதில், மாணவர் சேர்க்கை, கல்லூரியின் நிதிநிலை, மாணவர்களின் வேலை வாய்ப்பு, அடிப்படை கட்டமைப்பு வசதிகள், கல்லூரியின் நற்பெயர், கல்லூரியில் வழங்கப்படும் கல்வியின் தரம், மாணவர்கள் மீதான அக்கறை உள்ளிட்ட விஷயங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். மருத்துவம், பல் மருத்துவம், நர்சிங், பார்மசி, பிசியோதெரபி கல்லூரிகள் என அனைத்துக் கல்லூரிகளும் தர மதிப்பீடு செய்யப்படும். இத்தர மதிப்பீட்டில் பங்கேற்பதற்காக, கல்லூரிகள் தேவையான முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு மதிப்பீட்டு ஆய்வில் நல்ல நிலையில் பங்கேற்கலாம். கல்லூரிகள் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள, பிப்ரவரி 1ம் தேதி முதல் மூன்று மாதங்கள் கால அவகாசம் வழங்கப்படுகிறது. எனவே, கல்லூரி முதல்வர்கள், நிர்வாகத்திடம் மேம்பாட்டு நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி, உரிய நடவடிக்கைகளை எடுக்கலாம்.கல்லூரிகளை தர மதிப்பீடு செய்யும் குழுவினரின் ஆய்வு, மே 1ம் தேதி முதல் துவக்கப்படும். தர மதிப்பீட்டு பணி, குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்தப்படும். எனவே, கல்லூரிகள் தற்போதுள்ள நிலையிலிருந்து முன்னேறியிருப்பதை எடுத்துரைக்க முடியும். கல்லூரிகள், முதல்வர், துணை முதல்வர், தர மதிப்பீட்டு ஆய்வுப் பணியில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து செயல்படவுள்ள நபரின் பெயர், தொலைபேசி எண், விலாசம் உள்ளிட்ட விவரங்களை பல்கலைக்கு அனுப்ப வேண்டும். தர மதிப்பீடு செய்யும் நிறுவனத்திற்கு, அதற்கான அதிகாரமளிக்கும் கடிதம் பல்கலையால் வழங்கப்படும். கல்லூரிகள் தேவையற்ற சிரமங்களை தவிர்க்க அக்கடிதத்தை பார்த்து, தனியார் நிறுவனத்தை ஆய்வு செய்ய அனுமதிக்கலாம். இவ்வாறு அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.