பிளஸ் 2 தேர்வில் முதல் மதிப்பெண் 1190!
சென்னை: பிளஸ் 2 தேர்வில் ஓசூர் விஜய் வித்யாலயா மெட்ரிக் மேலநிலைப்பள்ளி மாணவி ரேகா என்ற மாணவி முதல் ரேங்க் பெற்றுள்ளார். இவர் ஆயிரத்து 190 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாணவி ரேகா பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் : தமிழ் : 195 ; ஆங்கிலம் - 195; கணிதம் - 200; இயற்பியல் - 200; வேதியியல் - 200, உயிரியல் - 200. இவரது தந்தை திரு.கேசவன். தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். தாயார் திருமதி மலர்விழி நடுநிலைப்பள்ளி ஆசிரியராக பணியாற்றுகிறார். ரேகாவின் தங்கை கிருத்திகா. இவர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். விழுப்புரம் மாணவன் இரண்டாமிடம் பிடித்தார்: விழுப்புரம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த பாரதி மெட்ரிக்., பள்ளி மாணவன் வேல்முருகன் ஆயிரத்து 187 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தை பெற்றுள்ளார். 3 வது இடத்தை பிடித்த 4 பேர் : பிளஸ் 2 தேர்வில் 3 வது இடத்தை 4 பேர் பிடித்துள்ளனர். வித்தியா சகுந்தலா ( எஸ்.வி.எஸ்.எஸ்., மெட்ரிக்., பள்ளி திருநெல்வேலி) ரகுநாத் (பெரியகுளம்), சிந்துகவின் ( நாமக்கல்) , ரேகா (ஓசூர்). இந்த நான்கு பேரும் ஆயிரத்து 186 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கனவு நனவானது : மாணவி ரேகா பேட்டி பிளஸ் 2 தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற ஓசூர் விஜய வித்யாலயா பள்ளி மாணவி ரேகா அளித்த பேட்டியில், தனது கனவு நனவானதாக மகிழ்ச்சி தெரிவித்தார். தனது வெற்றிக்கு ஆசிரியர்களின் ஒத்துழைப்பும், பெற்றோர்கள் மற்றும் சகோதரி அளித்த ஊக்கமும் பெரும் உதவியாக இருந்ததாக தெரிவித்தார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 5,477 பள்ளிகளில் பயின்ற, ஏழு லட்சத்து, 23 ஆயிரத்து, 545 பேர், பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளனர். இத்துடன், தனித்தேர்வர்கள், 57 ஆயிரத்து, 86 பேர் தேர்வு எழுதியுள்ளனர். 1,890 மையங்களில் தேர்வுகள் நடந்தன. மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் குறித்த விவரம், அந்தந்த பள்ளிகளிலேயே, காலை 10 மணிக்கு அறிவிப்பு பலகைகளில் ஒட்டப்படும். மாணவர்கள், தங்கள் மதிப்பெண் பட்டியலை, வரும் 25ம் தேதி அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம், நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம். தனித்தேர்வர்களாக தேர்வு எழுதியவர்கள், தாங்கள் தேர்வு எழுதிய அந்தந்த தேர்வு மையங்களிலேயே மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம். விடைத்தாள் ஜெராக்ஸ் மற்றும் மறு கூட்டல் செய்ய விரும்புபவர்கள், வரும் 11 முதல், 16ம் தேதி வரை, அனைத்து முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்கள், இணை இயக்குனர் (கல்வி) புதுச்சேரி, அனைத்து மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்கள், அரசு தேர்வு மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் பெறலாம்.விடைத்தாள் நகல் பெறுவதற்கு, மொழிப்பாடம் மாற்றும் ஆங்கிலத் தாள் ஒவ்வொன்றுக்கும், தலா, 550 ரூபாயும், மற்ற பாடங்களுக்கு, 275 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும். பிளஸ் 2 தேர்வு முடிவை அறிந்துகொள்ள: www.dinamalar.com