உள்ளூர் செய்திகள்

சென்னையில் ரூ.200 கோடியில் உயர் சிறப்பு மையம் - மத்திய அமைச்சர் அறிவிப்பு

சென்னை: சென்னையில் உள்ள தேசிய திறன் பயிற்சி நிறுவனம், தொழில்நுட்பத்தின் மூலம் அதிகாரம் அளித்தலை மேம்படுத்தும் பிஎம் சேது திட்டத்தின் கீழ் ரூ.200 கோடி செலவில் உயர் சிறப்பு மையமாக மேம்படுத்தப்படவுள்ளதாக மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) ஜெயந்த் சௌத்ரி தெரிவித்துள்ளார். ரூ.60,000 கோடி ஒதுக்கீட்டுடன் நாடு முழுவதும் 1,000 தொழிற்பயிற்சி நிறுவனங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ள பிஎம் சேது திட்டத்தின் கீழ், சென்னை, ஐதராபாத், கான்பூர், லூதியானா, புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் உள்ள ஐந்து தேசிய திறன் பயிற்சி நிறுவனங்கள் உயர் சிறப்பு மையங்களாக மாற்றப்படும் எனவும் அவர் கூறினார்.அமைச்சர் ஜெயந்த் சௌத்ரி, சென்னையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் உரையாற்றினார். இந்நிகழ்வில், சிங்கப்பூருடன் இணைந்து இந்நிறுவனம் நவீன தொழில் உற்பத்தி துறையில் சிறப்பு பயிற்சி வழங்கும் என்றும், மாணவர்கள் உலகளாவிய போட்டித்திறனைப் பெறுவார்கள் என்றும் தெரிவித்தார். இளைஞர்களின் திறமையை வெளிக்கொண்டு வரவும், தொழில்துறையுடன் இணைந்து புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ளவும் இத்தகைய மையங்கள் முக்கிய பங்கு வகிப்பதாகவும் கூறினார்.பின்னர் அவர் தேசிய ஊடக கல்வி நிறுவனத்திற்கும் பயணம் செய்து, அதன் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். இந்நிகழ்வில், “சால்வை நெசவு கலைத்திறன்” என்ற புத்தகத்தையும், நிமி டாக்ஸ் - வாய்ஸ் ஆஃப் ஐடிஐ எனும் பல்மொழி பாட்காஸ்டையும் வெளியிட்டார். ஐடிஐ மாணவர்களின் வெற்றிக்கதைகளை வெளிப்படுத்தும் இந்தப் பாட்காஸ்ட் அகில இந்திய வானொலியிலும் ஒளிபரப்பப்படும் எனவும், திறன் வளர்ச்சி சூழலை வலுப்படுத்தும் ஒரு முக்கிய முயற்சியாக இது அமையும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்