உள்ளூர் செய்திகள்

3 மாதம் தாமதம் ஆனாலும் முழுசா கிடைக்கல அரசு பள்ளிகளில் சீருடை வழங்குவதில் குளறுபடி

சேலம்: அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, மூன்று மாத தாமதத்துக்கு பின் வழங்கப்பட்ட சீருடையும், பற்றாக்குறை-யாக இருப்பதால், ஆசிரியர்கள் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர்.தமிழகத்தில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், 1 முதல், 8 ம் வகுப்பு வரை, சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியருக்கு விலையில்லா சீருடைகள் வழங்கப்படுகின்றன.பள்ளி திறந்தவுடன் வழங்க வேண்டிய சீருடைகள், நடப்பு கல்வியாண்டில் முதல் பருவம் முடியும் வரை, அதாவது மூன்று மாதங்களாகியும் வழங்கப்படவில்லை. இதனால், சொந்த செலவில், சீருடை தைக்க, பல இடங்களில் பெற்றோர் கட்டாயப்படுத்தப்பட்டனர்.இந்நிலையில், காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, அக்., 7 ல் பள்ளி திறந்த பின், சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு சீருடைகள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. முதல்கட்டமாக ஒரு செட் சீருடைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், பல பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையளவுக்கு வழங்காமல், பற்றாக்குறையாக வழங்கப்படுவதால், குளறுபடி நடக்கிறது. ஆசிரியர்கள் அலைக்கழிப்புக்கு உள்ளாகின்றனர்.இதுகுறித்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது: பள்ளியில் உள்ள மாணவர்கள் வருகை, எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்து விபரங்களும், எமிஸ் இணையதளத்தில் உடனுக்குடன் பதிவு செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில்தான், பள்ளி மாணவர்களுக்கு சீருடையும் தயாரிக்கப்படுகிறது.ஆனாலும், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில், புதிதாக ஆறாம் வகுப்பு சேரும் மாணவர்களுக்கு, முழுமையாக சீருடைகள் வழங்கப்படவில்லை. ஏற்கனவே சீருடை வழங்கியதில் மூன்று மாதம் வரை தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், அதையும் முழுமையாக வழங்காமல் இழுத்தடிப்பது, பெற்றோரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இணையதள பதிவில், எத்தனை மாணவர்களுக்கு, சீருடை வழங்க வேண்டும் என துல்லியமாக கண்டுபிடிக்க முடியும் என்ற நிலையிலும், இந்த பற்றாக்குறை வினியோகம் ஏன் என தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்