இன்ஜினியரிங்: 30 சதவீதம் பேருக்கு வேலை இல்லை
இருந்தாலும், புதிதாக இன்ஜினியரிங் படிப்பை முடித்தவர்களில் 30 சதவீதம் பேர், வேலை வாய்ப்பு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர் என, ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் இன்ஜினியரிங் படிப்பை முடித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இருந்தாலும், திறமைவாய்ந்த இன்ஜினியர்களுக்கு இங்கு பற்றாக்குறை நிலவுவதாக தொழில் துறையினர் தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்து, மும்பை ஐ.ஐ.டி.,யைச் சேர்ந்த ரங்கன் பானர்ஜி, வினாயக் புருஷோத்தம் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வு முடிவுகள் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளன.அதில் கூறப்பட்டுள்ளதாவது:இந்தியாவில் இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை 10.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது மற்ற நாடுகளில் இன்ஜினியரிங் படித்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம். இந்த எண்ணிக்கை சீனாவில் 9.9 சதவீதமாகவும், தென் கொரியாவில் 5.9 சதவீதமாகவும், பிரிட்டனில் 3.9 சதவீதமாகவும் உள்ளது.இந்தியாவை பொறுத்தவரை 2008ல், 3.5 லட்சம் பேர் இன்ஜினியரிங் பட்டமும், 23 ஆயிரம் பேர் இன்ஜினியரிங் முதுகலை பட்டமும், ஆயிரம் பேர் இன்ஜினியரிங் தொடர்பான ஆராய்ச்சி பட்டமும் பெற்றிருந்தனர்.இந்த அளவுக்கு இன்ஜினியரிங் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருந்தாலும், அவர்களுக்கு போதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கிறதா, அவர்கள் திறமையானவர்களா என்ற கேள்வியும் எழுகிறது.ஆய்வு முடிவுகளின்படி, புதிதாக இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர்களில், 30 சதவீதம் பேர், படிப்பை முடித்து ஒரு ஆண்டு ஆன நிலையிலும் போதிய வேலை வாய்ப்பு கிடைக்காத நிலையில் உள்ளனர்.ஆனாலும், இது தொடர்பான உறுதியான புள்ளி விவரங்கள் கிடைக்கவில்லை. இந்தியாவை பொறுத்தவரை, பத்து லட்சம் பேரில், 214 பேர் இன்ஜினியரிங் படித்தவர்களாக உள்ளனர். இந்த எண்ணிக்கை தென் கொரியாவில் தான் அதிகம். அங்கு பத்து லட்சம் பேரில், 1,435 பேர் இன்ஜினியரிங் படித்தவர்கள். இந்த எண்ணிக்கை ஜப்பானில் 765 ஆகவும், சீனாவில் 340 ஆகவும் உள்ளது.இந்தியாவில் அதிக சதவீத மார்க் பெற்று தேர்ச்சி பெற்ற இன்ஜினியரிங் மாணவர்கள், முதுகலை பட்ட படிப்பை படிப்பதில் ஆர்வம் காட்டுவது இல்லை. அதிக அளவில் இன்ஜினியரிங் மாணவர்களை உருவாக்குவதில் ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.எஸ்.சி.,யின் பங்கு மிகவும் குறைவாகவே உள்ளது.இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.