எம்.பி.பி.எஸ்., அட்மிஷன் அகில இந்திய ஒதுக்கீட்டில் 138 இடங்கள் அதிகரிப்பு
சென்னை: மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கையில், அகில இந்திய ஒதுக்கீட்டில், 138 இடங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளன.நாடு முழுதும், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, 'நீட்' நுழைவு தேர்வு அடிப்படையில் நடத்தப்படுகிறது. இதில், அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கான கவுன்சிலிங்கை, எம்.சி.சி., எனும் மருத்துவ கவுன்சிலிங் குழு நடத்துகிறது. மாநில ஒதுக்கீடு கவுன்சிலிங்கை, தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குனரகம் நடத்துகிறது.தற்போது, மாநில ஒதுக்கீடு கவுன்சிலிங், இரண்டு சுற்றுகள் நிறைவடைந்துள்ளன. இதில், காலியாக உள்ள இடங்களுக்கான, மூன்றாம் சுற்று கவுன்சிலிங், இன்று துவங்கி, 9ம் தேதி வரை நடக்கிறது. அதன்பின், 11 முதல் 14ம் தேதி வரை, விருப்ப கல்லுாரிகளை தேர்வு செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இறுதி ஒதுக்கீடு ஆணைகள், 16ம் தேதி வெளியிடப்பட உள்ளன.இந்நிலையில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான மூன்றாம் சுற்று கவுன்சிலிங், விருப்ப கல்லுாரிகளை தேர்வு செய்யும் நடைமுறை, நேற்றுடன் நிறைவடைந்தது.இந்த சூழலில், அகில இந்திய ஒதுக்கீட்டில், 138 மருத்துவ படிப்பு இடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளன. இதனால், விருப்ப கல்லுாரிகள் தேர்வு செய்வதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.