புதுச்சேரியில் 57ம் ஆண்டு கம்பன் விழா வரும் 10ம் தேதி துவங்கி 3 நாட்கள் நடக்கிறது
புதுச்சேரி: கம்பன் கழகத்தின் 57ம் ஆண்டு கம்பன் விழா, வரும் 10ம் தேதி துவங்கி மூன்று நாட்கள் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.புதுச்சேரி கம்பன் கழகத்தின் பேரவைக் கூட்டம் சற்குரு ஓட்டலில் நடந்தது. கம்பன் கழக் தலைவர் செல்வகணபதி எம்.பி., தலைமை தாங்கினார். செயலாளர் சிவக்கொழுந்து முன்னிலை வகித்தார்.கம்பன் கழக புரவலர் முதல்வர் ரங்கசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.பேரவை கூட்டத்தில், கம்பன் கழகத்தின் 57ம் ஆண்டு கம்பன் விழாவை வரும் 10, 11, 12 ஆகிய தேதிகளில் மூன்று நாட்கள் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. கம்பன் விழாவில் இடம் பெற உள்ள இலக்கிய நிகழ்ச்சிகள், பங்கேற்கும் தமிழறிஞர்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.மேலும், விழாவுக்கு வருகை தரும் தமிழறிஞர்கள், இலக்கியவாதிகளை வரவேற்று உபசரிப்பது , அவர்களுக்கான தங்குமிடம், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.கூட்டத்தில் துணைத் தலைவர்கள் ரத்தின ஜனார்த்தனன், இசைக்கலைவன், அசோகன், பொருளாளர் பழனி அடைக்கலம், இணை செயலாளர்கள் பாலகிருஷ்ணன், சுரேஷ், கோவிந்த திருநாவுக்கரசு, துணை செயலாளர்கள் விஜயன்சிவராமன், தண்டபாணி, லிங்கேசர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.