ஹெச்1பி விசா விவகாரம்; யு-டர்ன் அடித்த டிரம்ப்
வாஷிங்டன்: திறமையானவர்களுக்கு அமெரிக்காவில் வாய்ப்பு வழங்கவே ஹெச்1பி விசா வழங்கப்பட்டு வருவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.இது குறித்து செய்தி நிறுவனத்திற்கு அதிபர் டிரம்ப் அளித்த பேட்டி: அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுக்கு நிதி உதவி செய்வதில் வெளிநாட்டு மாணவர்களின் பங்கு முக்கியமானது. சர்வதேச மாணவர் சேர்க்கையைக் குறைப்பது பரவலான கல்லூரி மூடல்களுக்கும், பொருளாதார இழப்புக்கும் வழிவகுக்கும். வெளிநாட்டு மாணவர்களை அமெரிக்காவில் படிப்பதற்கு அனுமதிப்பது, நாட்டின் உயர்கல்வி முறையை நிதி ரீதியாக வலுவாக வைத்திருக்கும் வணிக நடைமுறைக்கு நல்லது.பல அமெரிக்க பல்கலைக்கழகங்கள் தொடர்ந்து செயல்பட வெளிநாட்டு மாணவர்களை நம்பியுள்ளன. வெளி நாட்டு மாணவர்கள் இருப்பது நல்லது என்று நான் உண்மையில் நினைக்கிறேன். நான் உலகத்துடன் இணைந்து செயல்பட விரும்புகிறேன். சீனா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை கடுமையாகக் குறைவது அமெரிக்காவில் உள்ள பாதி கல்லூரிகளை வணிகத்திலிருந்து வெளியேற்றக்கூடும்.வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்க பொருளாதாரத்திற்கு டிரில்லியன் கணக்கான டாலர்களை பங்களிக்கின்றனர். உள்நாட்டு மாணவர்கள் செலுத்துவதை விட, வெளிநாட்டு மாணவர்கள் இரண்டு மடங்கு அதிகமாக செலுத்துகின்றனர். நான் அவர்களை விரும்புகிறேன் என்பதல்ல, ஆனால் நான் அதை ஒரு வணிகமாகவே பார்க்கிறேன். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.இதனிடையே, கல்வி மற்றும் வேலைக்காக அமெரிக்கா வரும் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் ஹெச்.1பி விசா குறித்து அமெரிக்கா அதிபர் டிரம்ப் தற்போது பேசியது உலக நாடுகளிடையே கவனத்தைப் பெற்றுள்ளது.ஹெச்1பி விசா குறித்து எழுப்பிய கேள்விக்கு, டிரம்ப் கூறுகையில், 'அமெரிக்கர்களுக்கு சில குறிப்பிட்ட துறைகளில் திறமை பற்றாக்குறை நிலவுகிறது. எனவே, அவர்கள் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டி உள்ளது. எனவே, வெளிநாடுகளில் இருந்து திறமையானவர்கள் அமெரிக்காவுக்கு அழைத்து வரப்படுகின்றனர்,' எனக் கூறினார்.முன்பு, ஹெச்1பி விசா விவகாரத்தில் புதிய கட்டுப்பாடுகளை விதித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ஹெச்1பி விசாவுக்கான கட்டணத்தை, 2 லட்சம் ரூபாயில் இருந்து 88 லட்சம் ரூபாயாக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.டிரம்பின் கருத்துக்கள், சர்வதேச மாணவர்கள் மீதான கட்டுப்பாடுகளை கடுமையாக்க அவரது நிர்வாகம் எடுத்த பல நடவடிக்கைகளுக்கு முற்றிலும் மாறுபட்டது. ஆயிரக்கணக்கான விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் பாலஸ்தீன ஆதரவு நடவடிக்கைகளில் ஈடுபட்ட சில வெளிநாட்டு மாணவர்கள் கைது அல்லது நாடு கடத்தலை எதிர்கொண்டுள்ளனர்.டிரம்ப்பின் இந்த திடீர் மனமாற்றம், ஹெச்1பி விசா விவகாரத்தில் கட்டுப்பாடுகளை தளர்த்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.