உள்ளூர் செய்திகள்

10 ஆண்டுகளாக அடிப்படை வசதியில்லாத ஆதிதிராவிட மாணவர் விடுதி

ராமநாதபுரம்: ராமநாதபுரம், இலாந்தை ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில், 10 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. கடந்த 2003 ல் கட்டப்பட்ட இந்த விடுதியில், சேதுபதி அரசு கலைக் கல்லூரி 110 மாணவர்கள் தங்கியுள்ளனர். விடுதியில் உள்ள கழிவறை 10 ஆண்டுகளாக பராமரிக்கப்படவில்லை. இதன் துர்நாற்றத்தை சகித்துக்கொண்டு மாணவர்கள் தங்கி படிக்கின்றனர். விடுதி அறை, வராண்டாவில் விளக்கு எரியவில்லை. மாணவர் அமர்நாத் கூறுகையில், "குறுகலான அறைகளுக்குள் ஆடு, மாடுகளைப் போல் அடைபட்டுள்ளோம். விடுதியில் சுகாதாரமே இல்லை. கலெக்டரிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. காம்பவுண்டு சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளது. விடுதியை சுற்றி காட்டுக்கருவேல மரங்கள் வளர்ந்து, மழைநீர் தேங்கியுள்ளதால் பாம்புகள் அடிக்கடி அறைகளுக்குள் வருகின்றன" என்றார். மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் எஸ்.ஆர்.கணேசன் கூறுகையில், "நான் இந்த மாவட்டத்திற்கு வந்து 15 நாட்கள்தான் ஆகிறது. விடுதி பராமரிப்பு குறித்து ஆய்வு நடத்தியபின், நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்