10ம் வகுப்பு தேர்வில் 97.57 சதவீதத்துடன் புதுக்கோட்டை முதலிடம்
சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. கடந்த ஆண்டை விட, 0.51 சதவீதம் பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றதால், இந்தாண்டு தேர்ச்சி, 94.31 சதவீதமாக உயர்ந்துள்ளது.தமிழகத்தில், கடந்த மார்ச் 11 முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை, 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் நடந்தன. இதில், 12,467 பள்ளிகளைச் சேர்ந்த 4 லட்சத்து, 35,247 மாணவியர்; 4 லட்சத்து, 35,396 மாணவர்கள் என மொத்தம் 8 லட்சத்து, 70,643 பேர் பங்கேற்றனர்.அவர்களுக்கான தேர்வு முடிவுகளை, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன், நேற்று காலை, சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் வெளியிட்டார்.இதில், 4 லட்சத்து, 19,891 மாணவியர், 4 லட்சத்து, 1,214 மாணவர்கள் என மொத்தம், 8 லட்சத்து, 21,105 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். அதன்படி, மாணவியரின் தேர்ச்சி 96.47 சதவீதமாகவும், மாணவர்களின் தேர்ச்சி 92.15 சதவீதமாகவும் உள்ளது; மாணவர்களை விட மாணவியர், 4.32 சதவீதம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.தமிழகத்தில், 13,292 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வெழுதியதில், 85.89 சதவீதம் பேர், அதாவது, 11,416 பேர் தேர்ச்சி பெற்றனர். அதே போல், 370 மாற்றுத்திறனாளிகளில், 354 பேரும், 24,353 தனித்தேர்வர்களில், 8,744 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.ஒட்டுமொத்த மாணவர்களின் தேர்ச்சியில், மாவட்டங்களை பொறுத்தவரை, 97.57 சதவீதம் தேர்ச்சியுடன் புதுக்கோட்டை மாவட்டம், முதலிடம் பிடித்துள்ளது.தொடர்ந்து, 97.54 சதவீதத்துடன் சிவகங்கை இரண்டாமிடம்; 97.41 சதவீதத்துடன் தஞ்சாவூர் மூன்றாமிடம்; 97.31 சதவீதத்துடன் திருச்சி நான்காமிடம்; 97.30 சதவீதத்துடன் கன்னியாகுமரி ஐந்தாம் இடத்தை பெற்றுள்ளன.அதே போல், அரசு பள்ளிகளின் தேர்ச்சியின் அடிப்படையில், 97.42 சதவீதத்துடன் சிவகங்கை மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. அதற்கு அடுத்த இடங்களை, 97.09 சதவீதத்துடன் புதுக்கோட்டை; 96.89 சதவீதத்துடன் தஞ்சாவூர்; 96.78 சதவீதத்துடன் ராமநாதபுரம்; 96.48 சதவீதத்துடன் திருச்சி ஆகிய மாவட்டங்கள் பிடித்துள்ளன.பத்தாம் வகுப்பு தேர்வெழுதி வெற்றி பெற்று உள்ள மாணவர்கள், அவர்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்ட பெற்றோர், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுக்கு வாழ்த்துகள். எதிர்பார்த்த வெற்றி வாய்ப்பை தற்போது தவறவிட்டு, தன்முனைப்புடனும், தன்னம்பிக்கையுடனும் வெற்றி பெற உள்ள மாணவர்களுக்கு சிறப்பு வாழ்த்துகள். தேர்ச்சி பெறாத மாணவர்கள் அனைவரும் துணைத் தேர்வுகளை எழுதி, மீண்டும் படிப்பை தொடர வேண்டும். அதே போல், உயர் கல்வியிலும் தொடர வேண்டும்.- ராஜ்மோகன், பள்ளி கல்வி துறை அமைச்சர்.